Last Updated : 31 Oct, 2023 03:24 PM

 

Published : 31 Oct 2023 03:24 PM
Last Updated : 31 Oct 2023 03:24 PM

தமிழ் சிறப்பு வகுப்புக்கு வரும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு உணவளித்து பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்!

சிறப்பு வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு பிரியாணி விருந்து.

புதுச்சேரி: தமிழ் சிறப்பு வகுப்புக்கு வரும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பும் உணவுப் பொருளை கொடுத்து பாடம் கற்று தருகிறார் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர்.

புதுச்சேரி அடுத்த சூரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் அரசுப் பள்ளியில் படித்து முடித்து கடந்த 2007-ம் ஆண்டு புதுச்சேரி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தற்போது கல்மண்டபம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு மாணவர்களை சிறப்பு வகுப்புக்கு வரவழைக்க, அவர்கள் விரும்பும் மதிய உணவை ஏற்பாடு செய்து தருகிறார். விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு பிரியாணி, முட்டை மற்றும் அவர்கள் விரும்பும் சம்சா, டீ, பப்ஸ் என வழங்குகிறார்.

இதுபற்றி ஆசிரியர் கிருஷ்ணசாமியிடம் கேட்டதற்கு, “அரசுப் பள்ளியில் படித்து ஆசிரியாக உள்ளேன். இங்கு படிக்கும் குழந்தைகளின் கஷ்டம் நன்கு தெரியும். அவர்கள் அனைத்து பாடத்திலும் நல்ல மதிப்பெண் எடுப்பது அவசியம். குறிப்பாக தமிழில் திறனை வளர்க்க, அதில் மதிப்பெண் அதிகம் எடுக்க வேண்டும் என ஆர்வம். அதனால் மாணவர்களை சிறப்பு வகுப்புக்கு வரவழைக்க, அவர்கள் விரும்பும் உணவை சொந்த செலவில் வழங்குவது வழக்கம்.

மாணவர்களுடன் ஆசிரியர் கிருஷ்ணசாமி.

எங்கள் பள்ளியில் ஏழை குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் மட்டுமே உள்ள குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளும், சிறப்பிடம் பெறுவோருக்கு பரிசுகள் தருவதும், பத்தாம் வகுப்பு முடித்து செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டுதோறும் அறுசுவை உணவு விருந்து அளிப்பதும் வழக்கம்” என்றார்.

இதுபற்றி மாணவர்கள் தரப்பில் கூறுகையில், “பெற்றோர் வெளியூருக்கு கூலி வேலைக்கு சென்றதால் சில மாணவர்கள் முடி வெட்டுவதற்கு இயலாமல் இருந்தனர். இதையடுத்து முடி திருத்துவோரை அழைத்து வந்து அனைவருக்கும் முடிவெட்ட ஏற்பாடு செய்தார். அதேபோல் கலை நிகழ்ச்சிக்கு செல்லும்போது அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆடைகள் அளித்து உதவுவதை எப்போதும் எங்களால் மறக்க முடியாது” என்றனர்.

“படிப்பு மட்டுமே ஏழ்மையில் இருந்து மீட்டெடுக்கும் வழி. அதற்கான கல்வியை எனக்கு அரசுப் பள்ளி அளித்தது. அதேபோல் ஏழை குழந்தைகளும் வாழ்க்கை தரத்தை உயர்த்த கல்வி மூலம் முயல்வதே என் இலக்கு” என்றார் கிருஷ்ணசாமி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x