Last Updated : 12 Sep, 2023 04:30 PM

 

Published : 12 Sep 2023 04:30 PM
Last Updated : 12 Sep 2023 04:30 PM

புத்தகங்கள் இருந்தும் மக்களுக்கு விநியோகிக்க ஊழியர்கள் இல்லை: புதுச்சேரி நூலகங்கள் புதுப்பொலிவு பெறுமா?

புதுச்சேரி: புதுச்சேரி பிராந்தியத்தில் ரோமன் ரோலண்ட் அரசு பொது நூலகமும், 54 கிளை நூலகங்களும், காரைக்கால் பிராந்தியத்தில் டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் அரசு நூலகமும் 18 கிளை நூலகங்களும், மாஹேவில் அரசு பொது நூலகமும், 3 கிளை நூலகங்களும், ஏனாமில் அரசு பொது நூலகமும் 2 கிளை நூலகங்களும் இயங்கிவருகின்றன. இவற்றை தவிர புதுச்சேரி அரசு அருங்காட்சியகம், அரசு ஆவண காப்பகம், பாரதிதாசன் நினைவகம், பாரதியார் நினைவகம் ஆகியவற்றிலும் இயங்கும் 4 நூலகங்கள் என மொத்தம் 85 நூலகங்கள் உள்ளன.

இந்த நூலகங்களில் 13 லட்சத் துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன. புதுச்சேரி ராஜ்நிவாஸ் அருகே தலைமை நூலகமாக ரோமன் ரோலண்ட் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் 1827-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 195 ஆண்டுகள் பழமையான இந்த நூலகத்தில் தமிழ், பிரெஞ்சு, இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் 4.5 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன.

ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து புதுவை நூலகங்களில் போட்டித் தேர்வுக்கு பயிற்சி புத்தகங்கள் பிரிவை தனியாக தொடங்கியது. இங்கு இளநிலை எழுத்தர் முதல் ஐஏஎஸ் தேர்வு வரை தேர்வு எழுத பயிற்சி பெறுவதற்கு தேவையான புத்தகங்கள் உள்ளன. நாள் தோறும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு வந்து பயிற்சி பெறுகின்றனர். நூலகத்தையொட்டிய வெளிப்பகுதியில் மரங்களுடன் கூடிய வராண்டாவில் ஏராளமான இளையோர் அமர்ந்து படிப்பார்கள்.

குழந்தை களுக்கான நூலகப் பிரிவும் நூலக வளாகத்தில் உள்ளது. இந்நிலையில் போட்டித்தேர்வுக்கு மாணவர் அமர்ந்து படிக்கும் பகுதிக்கும், குழந்தைகள் பிரிவுக்கும் இடையில் உள்ள சுவற்றின் மேற்பகுதி இடிந்து விழுந்துள்ளது. அதேபோல் நூலகத்தினுள் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நூலகங்கள் மோசமான நிலையில் தான் உள்ளன.

புதுச்சேரி ரோமன் ரோலண்ட் நூலகக் கட்டிடம் பழுதடைந்து
மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.

இதுபற்றி நூலகம் தரப்பில் விசாரித்த போது, “நூலகம் பழமையானது. நூறாண்டு கட்டிடம். அத்துடன் கடற்கரைக்கு அருகேயுள் ளதால் உப்புக்காற்றால் காரை பெயர்ந்து விழுவது அதிகரித்துள்ளது. அதை சரி செய் வதாக சொல்லியுள்ளனர். ஆண்டுதோறும் பராமரித்தாலும் மிக பழமையான கட்டிடம் என்பதால் இப்பிரச்சினை ஏற்படுகிறது. அர சிடம் தெரிவித்துள்ளோம்.

பொதுவாக போட்டித் தேர்வுகளுக்கு நடப்பாண்டில் உள்ள தகவல்களுடன் கூடிய புத் தகங்கள் இருந்தால் அது படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடந்த 2022-ல் போட்டித்தேர்வுக்கு ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளதால் இங்கு ஏராளமான இளை யோர் வருகின்றனர். எல்டிசி தேர் வில் 17 பேரும், யூடிசி தேர்வில் 10 பேரும் இங்கு படித்தவர்கள் வென்றுள்ளனர்” என்றனர்.

காலி இடங்கள்: இதேபோல் புதுவையில் நூலக பிரிவுக்கு 1989-ம் ஆண்டு காலியாக இருந்த பணிகள் நிரப்பப்பட்டன. அதன் பிறகு ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த 33 ஆண்டுகளாக பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படாததால் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. பல்வேறு நூலகங்களில் ஊழியர்கள் இல்லாத அவல நிலை நீடித்து வருகிறது. இதனால் அந்தந்த பகுதி மாணவர்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு சார்பில் புத்தகங்கள் கொள்முதல் செய்து நூலகங்களுக்கு அனுப்பி வைத்தாலும் அதனை முறையாக பிரித்து அடுக்கி வைக்கவும், பொதுமக்களுக்கு அதனை கொடுக்கவும் போதுமான ஊழியர்கள் இல்லை. இதனால் வாங்கிய புத்தகங்கள் மூட்டை மூட்டையாக கட்டி நூலகங்களில் குவிந்துள்ளன. புத்தகங்களை கொள்முதல் செய்தும், அதனை பொதுமக்களுக்கு விநி யோகம் செய்ய ஊழியர்கள் நியமிக்காததால் வீணாகி வருகின்றன.

நூல்களை மக்களுக்கு தரவும், போட்டித்தேர்வுக்கான நூல்களை வாங்கி விநியோகிக்கவும் புதுவை அரசு காலியாக உள்ள நூலகர் பதவிகளையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது பொதுமக்கள், இளையோரின் கோரிக்கையாக உள்ளது.
இதுபற்றி கலை பண்பாட்டுத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி நூலகத் துறையில் கடந்த 33 ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை.

எனவே மொத்தம் உள்ள 83 நூலக தகவல் உதவியாளர் பணியிடங்களில் 82 இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல் 2 உதவி நூலக தகவல் அலுவலர் பணியிடங்களும், 20 நூலக எழுத்தர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதை நிரப்பும் கோப்புகள் தற்போது அரசிடம் உள்ளன. ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் பல்வேறு நூலகங்களில் புத்தகங்கள் இருந்தும் அதனை பொதுமக்களுக்கு கொடுக்க முடியாத நிலை உள்ளது” என்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x