Published : 21 Jul 2023 06:18 AM
Last Updated : 21 Jul 2023 06:18 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு | இடம் கிடைத்தும் கல்லூரியில் சேராத மாணவர்கள் ஓராண்டு நீட் தேர்வு எழுத முடியாது

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் சிறப்பு சுற்றில் இடங்கள் பெற்று கல்லூரிகளில் சேராத மாணவர்கள், ஓராண்டுக்கு நீட் தேர்வு எழுத முடியாது என மருத்துவ கலந்தாய்வுக் குழு (எம்சிசி) தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்குமான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையம் வழியே நடத்தி வருகிறது.

3 முக்கிய மாற்றங்கள்: அதன்படி நிகழாண்டுக்கான கலந்தாய்வு https://mcc.nic.in/ என்ற இணையதளத்தின் வழியாக நேற்று தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9-ம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ம் தேதியும், காலி இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு செப்டம்பர் 21-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நிகழாண்டு கலந்தாய்வு நடைமுறையில் மூன்று முக்கிய மாற்றங்களை மருத்துவக் கலந்தாய்வுக் குழு மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல் சுற்றில் இடங்கள் பெற்றவர்கள், 3-ம் சுற்று வரை அதனை மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2-ம் சுற்று வரை மட்டுமே அந்த வாய்ப்பு இருந்தது.

அடுத்ததாக, காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்று கல்லூரியில் சேராதவர்களுக்கு நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட முந்தைய விதிகளில் அது இரண்டு ஆண்டாக இருந்தது.

மூன்றாவதாக, கலந்தாய்வுக்குப் பிறகு காலியாக உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் வசமே ஒப்படைக்கப்பட்டு வந்தன. தற்போது அது திருப்பி அளிக்கப்படமாட்டாது என மருத்துவக் கலந்தாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x