Last Updated : 30 Jun, 2023 06:52 PM

 

Published : 30 Jun 2023 06:52 PM
Last Updated : 30 Jun 2023 06:52 PM

கல்விக்காக சென்னை சென்று போராட்டம்: நத்தம் கிராம மக்களின் முயற்சி கைகூடுமா?

கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள நத்தம் கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி சென்னை வரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நத்தம் கிராமம். இதில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். இக்கிராமத்தில் கடந்த 1924-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. 80 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2004-ம் ஆண்டு இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை இப்பள்ளியில் தற்போது 420 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 6, 7, 8-ம் வகுப்புகளில் 140 மாணவர்கள் படித்து வருகின்றனர். 2024-ம் ஆண்டு கிராம மக்களால் இப்பள்ளியில் பொன்விழா (100 ஆண்டு) கொண்டாடப்பட உள்ள நிலையில் நத்தம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இப்பள்ளியில் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சுமார் 4 கி.மீ தூரமுள்ள சிறுகிராமம் பள்ளிக்கும், அதே 4 கி.மீ தூரமுள்ள விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர் பள்ளிக்கும் சாலை வசதி இல்லாததால் செல்வதில்லை. ஆனால் மாணவர்கள் சுமார் 2 கி.மீ தூரம் நடந்து சென்று பின்னர் பேருந்து மூலம் 7 கி.மீ தூரத்தில் உள்ள புதுப்பேட்டை பள்ளிக்கும், 10 கி.மீ தூரத்தில் உள்ள பண்ருட்டி பள்ளிக்கும் சென்று படித்து வருகின்றனர்.

பல்வேறு இடையூறுகளை கடந்து செல்ல வேண்டியிருப்பதால் பல மாணவிகள் உயர்கல்விக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளனர். இக்கிராம மாணவர்களின் நலன் கருதி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தேவையான பங்களிப்பு நிதியாக ரூ.1 லட்சத்தை பொதுமக்கள் திரட்டி கடந்த 2014-ம் ஆண்டு அரசுக்கு செலுத்தினர். பள்ளிக்கு தேவையான இடவசதியும் செய்து தரப்பட்டது. ஆனால் பள்ளியின் தரம் உயர்த்தப்படவில்லை.

இது தொடர்பாக கிராம மக்கள் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும், பல போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை. இதனால் அவர்கள் ஒன்று கூடி சென்னையில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர். அதன்படி நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் கலையரசியின் கணவரும், மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பின் மாவட்ட செயலாளருமான சேதுராஜன் போராட்ட ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து சேதுராஜன் தலைமையில் கிராம மக்கள் சிலர் சென்னை பள்ளிக் கல்வி இயக்கக இயக்குநர் அலுலகம் முன்பு கடந்த 27-ம் தேதி தொடர் உண்ணவிரத போராட்டதை தொடங்கினர். நேற்று முன்தினம் மாலை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மீண்டும் கிராமத்துக்கு திரும்பினர்.

இது தொடர்பாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் சேதுராஜன் கூறுகையில், “நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பை முடித்த மாணவர்கள் நீண்டதூரம் சென்று படிக்க வேண்டும் என்பதால் பெண் பிள்ளைகளின் கல்வி தடைபடுகிறது. மேலும், பேருந்துகளில் கடும் நெரிசலில் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுவதால், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி 4 ஆண்டுகளாக கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறோம்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இல்லையென்றால் பள்ளியை தரம் உயர்த்தும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x