Last Updated : 21 Jun, 2023 06:14 AM

 

Published : 21 Jun 2023 06:14 AM
Last Updated : 21 Jun 2023 06:14 AM

மாணவர் விடுப்பு எடுத்தால் பெற்றோர் செல்போனுக்கு குறுஞ்செய்தி - ‘கட்’ அடிக்கும் மாணவர்களுக்கு கடிவாளம்

திருச்சி: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்தால், அவர்களது பெற்றோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை இந்த கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் எமிஸ் இணையதளம் வாயிலாக பல்வேறு திட்டங்கள், இணைச் செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அனைத்து தகவல்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, எப்போது வேண்டுமென்றாலும் தேவைப்படும் தகவல்களை பெறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் மற்றும் பதிவேடு மூலம் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பதிவு, எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு 2021-2022 கல்வியாண்டில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் எமிஸ் இணையதளத்தில் இதரப் பணிகள் மற்றும் சர்வர் பிரச்சினை காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க பிரத்யேகமாக TNSED Attendance என்ற புதிய செயலி கடந்த 2022-23 கல்வியாண்டில் அக்டோபர் மாதம் சோதனை முறையில் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், கடந்த ஜனவரி 1 முதல் அனைத்து பள்ளிகளிலும் இச்செயலி மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த செயலி அப்டேட் செய்யப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை காலை, மாலை என இருவேளையும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரம், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை இந்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பது, சில நேரங்களில் பெற்றோருக்கு கூட தெரியாமல் இருக்கலாம். இதுபோன்ற மாணவர்களின் நிலையை பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில் நிகழ் கல்வியாண்டு முதல் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கும் நடைமுறை பள்ளி திறக்கப்பட்ட ஜூன் 12 முதல் கடைப்பிடிக்கப்படுகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x