Last Updated : 20 Jun, 2023 12:01 PM

 

Published : 20 Jun 2023 12:01 PM
Last Updated : 20 Jun 2023 12:01 PM

தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘நடைபாதையில்’ கல்வி பயிலும் மாணவிகள்

தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிட வசதியில்லாததால், நடைபாதையை வகுப்பறையாக்கி கல்வி பயிலும் மாணவிகள்.

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால் நடைபாதையில் மாணவிகள் கல்வி பயிலும் நிலையுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் 40 சென்ட் நிலப்பரப்பில் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப்பள்ளி கடந்த 1986-ம் ஆண்டு பெண்கள் உயர்நிலைப் பள்ளியாகவும், 2014-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 22 வகுப்பறைகளுடன் செயல்படும் இப்பள்ளியில் தற்போது, 1,800 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 52 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லை.

இதனால், ஒரே வகுப்பறையில் 80 மாணவிகள் அமர்ந்து கல்வி பயிலும் நிலையும், வகுப்பறை நடைபாதைகளில் அமர்ந்து கல்வி பயிலும் நிலையுள்ளது. மேலும், விளையாட்டு மைதானம், போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், மாணவிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையைப் போக்க கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் கூறியதாவது: இப்பள்ளியில் மலைக் கிராம மாணவிகள் அதிகம் படித்து வரும் நிலையில், பள்ளி 40 சென்ட் நிலத்தில் உள்ளது. மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் தேவை. மேலும், இதேபள்ளியில் உருது பள்ளியும் உள்ளது. போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாத தால், இட நெருக்கடியில் மாணவிகள் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது.

இப்பள்ளியின் அருகே செயல்பட்ட நீதிமன்றம் தற்போது, வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தைப் பள்ளி பெயருக்கு மாற்ற அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பள்ளி பெயருக்கு மாற்றவில்லை. இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பெண் கல்விக்கு முக்கியம் என விழிப்புணர்வு செய்யும் நிலையில், இங்கு கூடுதல் வகுப்பறை கேள்விக்குறியாக இருந்து வருகிறது. மேலும், கழிவறை, விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில், மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையுள்ளது. எனவே, கூடுதல் வகுப் பறை கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் மட்டும் 800 மாணவிகள் படிக்கின்றனர். ஆண்டுக்கு 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் உயர் கல்விக்குச் செல்கின்றனர். வகுப்பறையில் 40 பேர் அமர்ந்து படிக்க வேண்டிய நிலையில் 80 பேர் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வகுப்பறையில் மாணவி களுக்குக் கவனச் சிதறல் ஏற்படுகிறது.

போதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் விளையாட்டு மைதானம், கழி வறை வசதி களை மேம்படுத்தினால், மலைக் கிராம மாணவிகள் கல்வியில் சிறப்பிடம் பிடிக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். ‘ஒரு ஆண் கல்வி கற்றால் தனியொருவன் பயனடைவான். ஆனால், ஒரு பெண் கல்வி கற்றால் அவள் குடும்பமும், சமுதாயமும் மட்டுமின்றி நாட்டுக்கே நற்பயன் கிட்டும்’ இதை செயல்படுத்த மாணவி களுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்களைக் கட்ட வேண்டும் என்பதே தேன்கனிகோட்டை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x