

இறையன்பு
காட்டாங்குளத்தூர்: ஸ்கூட்டர் மீது அமைச்சரின் கார் மோதியதில் 26 வயது இளைஞர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் காரை ஓட்டிவந்த சென்னை மாநகரக் காவல் ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த சிவக்குமார் மகன் இறையன்பு (26). இவர் நேற்று நள்ளிரவு காட்டாங் குளத்தூர் சந்திப்பு அருகே ஜிஎஸ்டி சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை நோக்கி வந்த கார், அவரது ஸ்கூட்டரின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இறையன்பு படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் சிக்கிய கார், சமூகநலத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் 3 பெண் குழந்தைகள் ராஜபாளையத்தில் இருந்து சென்னை நோக்கிவந்தபோது கார் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
காரை மதுரையைச் சேர்ந்த சின்ன அக்னி (28) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர் சென்னை மாநகர காவல் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.
இறையன்புவின் தந்தை சிவக்குமார் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.