

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறைகள் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசியதாவது: ஜிஎஸ்டி மற்றும் முந்தைய வரிச்சட்டங்களின் வரி நடைமுறைகள் மற்றும் செயலாக்கம் குறித்த வணிகர்களின் குறைகள் தொடர்பான மனுக்கள் மீது உரிய தீர்வு காண ரூ.3 லட்சம் செலவில் ஒரு சீர்மிகு இணையதள வசதி உருவாக்கப்படும்.
தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் மற்றும் மத்திய விற்பனை வரிச்சட்டம் உள்ளிட்ட முந்தைய சட்டங்களின் கீழ் உள்ள வணிகர்களை நிர்வகிக்க, ஒவ்வொரு வணிகவரிக் கோட்டத்திலும் ஒரு தனி வரி விதிப்பு வட்டம் உருவாக்கப்படும். தமிழ்நாடு விற்பனை வரி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் விசாரணை வரம்பு, விற்பனைத் தொகையானது தற்போதுள்ள ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்படும்.
மாநில அளவிலான தரவு பகுப்பாய்வு, அலுவலர்கள் பணித்திறன் கண்காணிப்புக்கு புதிய பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு உருவாக்கப்படும். வரிவிதிப்பு, தணிக்கை மற்றும் திருப்புத் தொகை உள்ளடக்கிய வரி செலுத்துவோருக்கான சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் வரி நிர்வாகத்தில் முகம் தெரியாத நடைமுறை விரிவுபடுத்தப்படும்.
மேலும், வணிகவரித் துறையின் பயிற்சிக்கொள்கை மறு சீரமைக்கப்படும். சார்பதிவக எல்லை மறுசீரமைப்பு பொதுமக்களுக்கு விரைவான மற்றும் தடையற்ற சேவைகளை வழங்க, சார்பதிவாளர் பணிப்பளுவை குறைக்க ஒரு வருவாய் கிராமத்தை முழுமையாக ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
பணிப்பழுவை சீராக பகிர்ந்தளிக்கும் வகையில் சார்பதிவக எல்லைகள் மறுசீரமைக்கப்படும். பதிவுத்துறை மென்பொருள் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த ஐஐடி சென்னை நியமிக்கப்படும். ஏபிஐ தொழில்நுட்பம் மூலம், நிகழ் நேரத்தில் இறப்பு மற்றும் வாரிசுரிமைச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு போலி ஆவண பதிவுகள் தவிர்க்கப்படும்.
செப்.15 முதல் வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கடன் பெறும்போது உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு (எம்ஓடி), ரசீது ஆவணங்கள், நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு முறை மூலம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும்.
அக்.15 முதல் நான்கு வகையான குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் காகிதமற்ற பதிவு முறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு இணையவழியி்ல் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படும்.
ஏபிஐ தொழில்நுட்பம் மூலம் அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரிய நிலங்களின் பதிவுகளை உரிய துறை அலுவலர்கள் நேரடியாக உள்ளீடு செய்ய வழிவகை செய்யப்படும். கடந்த 2018-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், மையக்கணினி சான்றிதழ் விண்ணப்பதாரர்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வாரநாட்களில் மட்டும் செயல்படும். சனிக்கிழமை கட்டாயப் பணிமுறை கைவிடப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.