Published : 15 May 2023 06:26 AM
Last Updated : 15 May 2023 06:26 AM
சென்னை: தடையை மீறி குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக சென்னையில் ஒரே வாரத்தில் 34 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்தொடங்கியுள்ளார். குட்கா விற்பனையை அனைத்து காவல் நிலையஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 7 முதல் 13-ம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்து, பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தொடர்பாக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 34 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 909 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை காவல்ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, ``சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனவே, தடை செய்யப்பட்ட பொருட்களைக் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT