Published : 12 Mar 2023 04:25 AM
Last Updated : 12 Mar 2023 04:25 AM

இந்திய கம்யூ. நிர்வாகி கொலைக்கு பழிக்குப் பழியாக திருவாரூரில் ரவுடியை கொன்ற வழக்கில் 5 பேர் கைது

திருவாரூர்: திருவாரூரில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி ரவுடியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், கடந்த ஆண்டு நடந்த இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலைச் சம்பவம் நடந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (34). வளரும் தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த இவர் மீது கொலை உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருவாரூர் நீதிமன்றத்தில் ஒருவழக்கு தொடர்பாக ஆஜராகிவிட்டு,வழக்கறிஞர் உள்ளிட்டோருடன் ராஜ்குமார் காரில் சென்று கொண்டிருந்தார். திருவாரூர் கமலாபுரம் பகுதியில் சென்ற போது, காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், ராஜ்குமார் உள்ளிட்டோர் சென்ற கார் மீது, தாங்கள் வந்த காரை மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், காரில் இருந்த ராஜ்குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிவிட்டது.

இது தொடர்பாக திருவாரூர் எஸ்.பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடிவந்தனர். இதனிடையே, ராஜ்குமாரின் உறவினர்கள், ஆதரவாளர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டு, கொலையாளிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நீடாமங்கலம் ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின் பாரதி(32), வீரபாண்டியன்(29), சூர்யா(21), அரசு(20), மாதவன்(21)ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். ஆனால், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டஅனைவரையும் கைது செய்தால்தான் ராஜ்குமாரின் உடலை வாங்குவோம் எனக்கூறி திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே வளரும் தமிழகம் கட்சியினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். விரைவில் அனைவரையும் கைது செய்துவிடுவதாகக் கூறி அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.

போலீஸார் தடியடி: அதன்பின், ராஜ்குமாரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ராஜ்குமாரின் உடல் திருவாரூரில் இருந்து, சொந்த ஊருக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. வழியில் ஒளிமதி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ராஜ்குமாரின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். பின்னர், பூவனூருக்கு ராஜ்குமாரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. ராஜ்குமாரின்உடலை அடக்கம் செய்யும் வரைநீடாமங்கலத்தில் நேற்று கடைகள்அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. நீடாமங்கலம், பூவனூர் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கம்யூ. பிரமுகர் மகன்: இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறும்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளராக இருந்த நடேச தமிழார்வன் என்பவர் கடந்தஆண்டு நீடாமங்கலம் கடைவீதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வந்திருந்தார்.

இந்தக் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும்வகையில் ராஜ்குமார் கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் கைதானவர்களில் ஸ்டாலின் பாரதி என்பவர், நடேச தமிழார்வனின் மகன் என்பதும், வீரபாண்டியன் என்பவர் நடேசதமிழார்வனின் அண்ணன் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x