Published : 08 Mar 2023 06:20 AM
Last Updated : 08 Mar 2023 06:20 AM
கோவை: நிதி நிறுவனம் நடத்தி ரூ.74.41 லட்சம் மோசடி செய்த 6 பேருக்கு தலா 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் ‘சன்ரேஸ் டிரேடிங் கார்ப்பரேஷன்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை நாமக்கல்லை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் நடத்தி வந்தார். இதில் முருகானந்தம், சரவணக்குமார், மாதையன், விஜயபாரதி, லியாகத் அலி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி 3 கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளனர். அதில், திட்டம் வாரியாக முறையே ரூ.1.40 லட்சம், ரூ.70 ஆயிரம், ரூ.35 ஆயிரம் என 15 மாதங்கள் முதலீடு செய்வோருக்கு, முதலீட்டின் இறுதியில் தங்கம், தங்க நாணயங்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தினர்.
இதனை நம்பி 46 முதலீட்டாளர்கள் 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ரூ.74.41 லட்சம் செலுத்தியுள்ளனர். ஆனால் வாக்குறுதி அளித்தபடி தங்கத்தையும், தங்க நாணயங்களையும் நிறுவனம் அளிக்கவில்லை.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து, 6 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் மேற்காணும் 6 பேருக்கும் தலா 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, மொத்தம் ரூ.75.60 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையில் ரூ.74.41 லட்சத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து வழங்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் க.முத்துவிஜயன் ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT