Published : 15 Jan 2023 05:35 PM
Last Updated : 15 Jan 2023 05:35 PM

திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு கடத்த முயன்ற  ரூ.25 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகள்

திருச்சி: மலேசியாவின் கோலாலம்பூருக்கு செல்ல இருந்த பயணியிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சர்வதேச நாடுகளில் இருந்து திருச்சி வரும் விமானப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குறிப்பாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு பெருமளவில் பயணிக்கின்றனர். திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் சோதனைகளில் இதுவரை பலமுறை தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருச்சியில் இருந்து வெளிநாட்டிற்கு யூரோ கரன்சிகள் கடத்தப்படவுள்ளதாக சனிக்கிழமை (ஜன.14) விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, விமான நிலையம் வந்திருந்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஆண் பயணி ஒருவரிடம் வான் நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில், மலேசியாவின் கோலாலம்பூருக்கு 29,950 யூரோக்களை அவர் கடத்தி செல்லவிருந்தது தெரியவந்தது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.25 லட்சத்து 84 ஆயிரத்து 685 ஆகும். இதனைத்தொடர்ந்து அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x