Published : 26 Dec 2022 04:10 AM
Last Updated : 26 Dec 2022 04:10 AM
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே பணிநீக்கம் செய்யப்பட்ட ஏட்டு கொலை வழக்கில் அவரது மனைவி உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை தாலுகா கல்லாவியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (48). ஏட்டாக பணிபுரிந்த இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவரது மனைவி சித்ரா (44). இவர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் ஜெகதீஷ்குமார் (19). இவர்கள் ஊத்தங்கரை கவர்னர்தோப்பு பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த செப்.16-ம் தேதி மாயமானார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தநிலையில், தனது தந்தையை கொலை செய்து, தென்பெண்ணை ஆற்றில் சடலத்தை வீசியதாக செந்தில்குமார் மற்றும் பாவக்கல்லைச் சேர்ந்த கமல்ராஜ் (37) ஆகியோர் கடந்த 14-ம் தேதி கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதனிடையே, நேற்று முன்தினம் ஊத்தங்கரை பாரதிபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் செந்தில்குமாரின் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
விசாரணையில், கூலிப்படை உதவியுடன் செந்தில்குமாரை, அவரது மனைவி சித்ரா உள்ளிட் டோர் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து, நேற்று எஸ்எஸ்ஐ சித்ரா, பாவக்கல்லைச் சேர்ந்த சாமியார் சரோஜா (22), கூலிப்படையைச் சேர்ந்த விஜயகுமார் (21), ராஜபாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமி மற்றும் செங்குட்டுவன் ஆகிய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: செந்தில்குமார் பணி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் கடந்த 2008-ம் ஆண்டு கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். அவரிடம் பாவக்கல்லைச் சேர்ந்த கமல்ராஜ் ஓட்டுநராக பணிபுரிந்துள்ளார்.
அப்போது, கமல்ராஜுக்கும், எஸ்எஸ்ஐ சித்ராவுக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை செந்தில்குமார் கண்டித்து வந்தார். இதில், ஆத்திரமடைந்த சித்ரா உள்ளிட்டோர் பாவக்கல் சாமியார் சரோஜாவின் ஆலோசனைப்படி கூலிப்படையைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருக்கு ரூ.9.60 லட்சம் கொடுத்து செந்தில்குமாரை கொலை செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT