Published : 15 Oct 2022 06:15 AM
Last Updated : 15 Oct 2022 06:15 AM

சேலத்தில் ரூ.70 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர் மீட்பு: ரவுடி உட்பட 2 பேர் கைது

சேலத்தில் ரூ.70 லட்சம் கேட்டு ஓட்டல் உரிமையாளரை கடத்திய ரவுடி டேவிட், குமார் ஆகியோரை சூரமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.

சேலம்: சேலத்தில் கந்து வட்டி கேட்டு ஓட்டல் உரிமையாளரை கடத்திய ரவுடி உட்பட இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், பெண் உட்பட 6 பேரை தேடி வருகின்றனர்.

சேலம் புது ரோடு ரவி நகரைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சுப்பிரமணி (41). இவர், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி அன்பரசி (34) ஓமியோபதி மருத்துவராக உள்ளார். சின்ன திருப்பதி பகுதியில் ரியல் எஸ்டேட் செய்து வரும் சரண்யா என்பவரிடம் கந்து வட்டிக்கு சுப்பிரமணி ரூ.24 லட்சம் கடன் பெற்றுள்ளார். ரூ.100-க்கு ரூ.20 வட்டி விகிதத்தில் கடன் பெற்றிருந்த சுப்பிரமணி, வட்டி, அசல் சேர்த்து ரூ.96 லட்சம் சரண்யாவுக்கு செலுத்தியுள்ளார். ஆனால், சரண்யா ரூ.100-க்கு ரூ.30 வட்டி தர வேண்டும் எனக் கூறி, சுப்பிரமணியிடம் மேலும் ரூ.70 லட்சம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் கூடுதல் வட்டி பணம் தரமுடியாது என சுப்பிரமணி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் 11 மணிக்கு காரில் வந்த கும்பல், தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் அன்பரசி புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடினர். விசாரணையில், சுப்பிரமணியை கடத்தியது சின்னம்மாபாளையத்தைச் சேர்ந்த ரவுடி டேவிட் (எ) உதயகுமார் தலைமையிலான கும்பல் என தெரியவந்தது.

சூரமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டில் சுப்பிரமணியை ரவுடி கும்பல் அடைத்து வைத்திருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். அங்குசென்று சுப்பிரமணியை மீட்ட போலீஸார், ரவுடி டேவிட் (37), அவரது நண்பர் ஏற்காடு அடிவாரத்தைச் சேர்ந்த குமார் (31) ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த மற்றவர்கள் தப்பி ஓடினர். கைதானவர்களிடம் விசாரித்த போது, ரியல் எஸ்டேட் அதிபர் சரண்யா கூறியதன் பேரில், சுப்பிரமணியை கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து, சரண்யா, அமீர் உள்பட 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x