Published : 02 Jul 2022 06:24 AM
Last Updated : 02 Jul 2022 06:24 AM
கோவை: திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் கோவை ஒத்தக்கால் மண்டபத்தைச் சேர்ந்த 36 வயதான பெண் திருமணம் செய்வதற்காக அதற்குரிய பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்திருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி மார்சியஸ் சிங் என்பவர் அந்த பெண்ணை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிலிருந்து இருவரும் தொடர்ந்து செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் மார்சியஸ் சிங், அந்த பெண்ணைத் தொடர்புகொண்டு தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை, சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது எனக் கூறியுள்ளாா்.
இதை நம்பிய அந்த பெண், ரூ.10 லட்சத்தை பல்வேறு தவணைகள் மூலம் மார்சியஸ் சிங் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும், நகையை அடமானம் வைத்து ரூ.9 லட்சத்தை மார்சியஸ் சிங்கின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர், தொடர்பு கொண்ட போது, மார்சியஸ் சிங்கின் செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. பலமுறை முயன்றும் இதே நிலை தான் இருந்தது.
அப்போது தான், திருமணம் செய்து கொள்வதாக கூறி தான் மோசடி செய்யப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.
அதன் பேரில் மார்சியஸ் சிங், உடந்தையாக இருந்த ஜித்தா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT