Last Updated : 30 Jun, 2022 05:32 AM

 

Published : 30 Jun 2022 05:32 AM
Last Updated : 30 Jun 2022 05:32 AM

கடனை திருப்பி செலுத்தாத சகோதரிகள் மீது தாக்குதல்: பெண் உட்பட 3 பேர் கைது

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள தொட்ட பொம்மசந்திராவை சேர்ந்தவர் லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 36 வயதான அவர் தன் மகளின் படிப்பு செலவுக்காக ராமகிருஷ்ண ரெட்டியிடம் வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்கான வட்டியை கடந்த 3 மாதங்களாக செலுத்தவில்லை என தெரிகிறது.

இதனால் ராமகிருஷ்ண ரெட்டி வட்டியுடன் அசலை செலுத்துமாறு நெருக்கடி கொடுத்துள்ளார். அதற்கு லட்சுமி தனது நிலத்தை விற்று ஒரு மாதத்துக்குள் கடனை திருப்பிச் செலுத்துவதாக ஊர் பெரியவர்கள் முன்னிலையில் எழுதிக் கொடுத்துள்ளார்.

கால அவகாசம் முடிவடையாத நிலையில் கடந்த திங்கள்கிழமை லட்சுமியின் வீட்டுக்கு வந்த ராமகிருஷ்ண ரெட்டி, அவரது உறவினர்கள் இந்திரம்மா, சுனில் குமார் கடனை கேட்டுள்ளனர். கடன் தராவிடில் இந்திரம்மாவுக்கு நிலத்தை விற்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு லட்சுமியும் அவரது சகோதரி ரமாவும் மறுப்பு தெரிவித்ததால் ராமகிருஷ்ண ரெட்டி இருவரையும் தாக்கியுள்ளார். சுனில் குமார், இந்திரம்மா ஆகியோரும் சேர்ந்து லட்சுமி, ரமா ஆகியோரின் ஆடைகளை கிழித்து தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து சர்ஜாபூர் காவல் நிலையத்தில் சகோதரிகள் புகார் அளித்தனர். அப்போது காவல் ஆய்வாளர் ராகவேந்திரா புகாரை பதிவு செய்ய மறுத்ததாக தெரி கிறது.

இந்நிலையில் லட்சுமியும், ரமாவும் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மனித உரிமை செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா உத்தரவிட்டார். இதையடுத்து சர்ஜாப்பூர் போலீஸார் நேற்று ராமகிருஷ்ண ரெட்டி, சுனில் குமார், இந்திரம்மா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x