Published : 15 Jun 2022 07:22 AM
Last Updated : 15 Jun 2022 07:22 AM

புதுக்கோட்டை | முதல் திருமணத்தை மறைத்து 2-ம் திருமணம் செய்து ரூ.75 லட்சம் வரதட்சணை வாங்கியவருக்கு 37 ஆண்டு சிறை

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணத்தில் ரூ.75 லட்சம் வரதட்சணை வாங்கி ஏமாற்றிய இளைஞருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை வசந்தபுரி நகரைச் சேர்ந்தவர் சோலை மகன்சோலை கணேசன் என்ற கணேசன்(36). இவருக்கும், சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவரும், சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று வேலை செய்தவருமான ஆரோக்கிய மேரிக்கும்(36) சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர், கடந்த 2010-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அப்போது, ஆரோக்கியமேரியிடம் இருந்து ரூ.75.85 லட்சத்தை கணேசன் வரதட்சணையாக வாங்கியுள்ளார்.

அதன் பிறகுதான், கணேசனுக்கு ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் திருமணமானது ஆரோக்கிய மேரிக்கு தெரியவந்தது. மேலும்,3-வதாக ஒரு சிறுமியை திருமணம் செய்ய கணேசன் முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கு,கணேசனின் தாய் ராஜம்மாள், சகோதரர் முருகேசன், உறவினர்நாராயணசாமி மற்றும் கோவையைச் சேர்ந்த சகோதரி கமலஜோதி ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர்.

தான் ஏமாற்றப்பட்டது குறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2018-ல் ஆரோக்கியமேரி அளித்த புகாரின் பேரில் கணேசன், ராஜம்மாள் முருகேசன், நாராயணசாமி, கமலஜோதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், கணேசனுக்கு 7 பிரிவுகளின் கீழ் மொத்தம் 37 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2.60 லட்சம் அபராதம் விதித்தார்.

மேலும், ராஜம்மாள், நாராயணசாமிக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1.9 லட்சம் அபராதமும், முருகேசனுக்கு 4 ஆண்டுகள்சிறை தண்டனை ரூ.1.60 லட்சம் அபராதமும், கமலஜோதிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x