Published : 14 Jun 2022 06:07 AM
Last Updated : 14 Jun 2022 06:07 AM

திருப்பூரில் தம்பதியை கட்டிப்போட்டு ரூ.50 லட்சம், 40 பவுன் நகை கொள்ளை

திருப்பூர்: திருப்பூரில் புஷ்பா திரையரங்க ரவுண்டானா ராயபண்டார வீதியைச் சேர்ந்தவர் சங்கமேஸ்வரன் (60). வட்டித் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள், கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இளையமகள் ஷிவானி (27), சென்னையில் ஐடி நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களாக பெற்றோருடன் ஷிவானி தங்கியுள்ளார். நேற்று முன்தினம் மாலை, முகக்கவசம் அணிந்தபடி வீட்டுக்குள் திடீரென புகுந்த 4 இளைஞர்கள், தம்பதியை தாக்கி கட்டிப் போட்டனர். ஷிவானியை மற்றோர் அறைக்குள் தள்ளி தாழிட்டனர். ராஜேஸ்வரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை அக்கும்பல் கொள்ளையடித்துச் சென்றனர்.

தகவலறிந்த திருப்பூர் வடக்கு போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தங்களை கட்டிப்போட்டு, கத்திமுனையில் ரூ.50 லட்சம் மற்றும் 40 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக சங்கமேஸ்வரன் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, சங்கமேஸ்வரன் வட்டித்தொழில் செய்து வந்ததால், அவரிடம் பணம் கொடுக்கல், வாங்கல் உள்ளவர்களின் விவரங்களை சேகரித்துள்ளோம். அதில் 2 பேர் பணம் கேட்டபோது, சங்கமேஸ்வரன் பணம் தரவில்லை என தெரிகிறது. அவர்கள் மீது சந்தேகம் உள்ளது. கொள்ளையர்களை பிடித்த பிறகே, எவ்வளவு நகை, பணம் கொள்ளைபோனது என்ற முழுவிவரமும் தெரியவரும். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x