Published : 12 Jun 2022 07:47 AM
Last Updated : 12 Jun 2022 07:47 AM

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே பணத் தகராறில் பெண் கொலை - 2 பெண்கள் கைது

அரியலூர்: கீழப்பழுவூர் அருகே பணத்தகராறில் பெண்ணைக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியது தொடர்பாக 2 பெண்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மனைவி மாரியாயி(47). இவர், நேற்று அருங்கால் கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரியிடம் சென்று, ஒரு பெண் கொலை செய்யப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீஸாருக்கு கிராம நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், போலீஸார் அருங்கால் கிராமத்துக்குச் சென்று, மாரியாயி சுட்டிக்காட்டிய கிணற்றில் இருந்து தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் ஒரு சாக்கு மூட்டையைக் கைப்பற்றினர். அதை திறந்து பார்த்தபோது, அதில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்த போலீஸார், இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

அருங்கால் கிராமத்தைச் சேர்ந்த ராஜூ மனைவி செல்விக்கும் (47), தஞ்சாவூர் வடக்கு வாசல் தெருவைச் சேர்ந்த வசந்தி(47) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது.

பாலில் விஷம்

இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த நிலையில், வசந்தியை கடந்த மே 31-ம் தேதி அருங்கால் கிராமத்துக்கு செல்வி வரவழைத்துள்ளார். அப்போது வசந்திக்கு, செல்வி பாலில் அதிகளவு தூக்க மாத்திரையைக் கலந்துகொடுத்து, கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், வசந்தியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, தனது தோழிகளான மாரியாயி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி மனைவி சரோஜா(46) ஆகியோரின் உதவியுடன் அப்பகுதியில் உள்ள கிணற்றில் வீசியது தெரியவந்தது.

அச்சத்தால் தகவல் அளித்தார்

இதற்கு உடந்தையாக இருந்த மாரியாயி, பிறகு கொலை குறித்து அச்சம் ஏற்பட்டதால், கிராம நிர்வாக அலுவலரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாரியாயி, சரோஜா ஆகியோரை கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள செல்வியை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x