Published : 31 May 2022 12:37 AM
Last Updated : 31 May 2022 12:37 AM
நாமக்கல்: ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்து நாடகமாடிய ஓட்டுநர் உள்பட 6 பேரை நாமக்கல் புதுச்சத்திரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள குப்பநாயக்கனூரை சேர்ந்தவர் சரக்கு ஆட்டோ ஓட்டுநர் ஜீவா(25). இவர் பேளுக்குறிச்சியைச் சேர்ந்த ஹரிஹரசுதனுக்கு சொந்தமான 40 டன் மிளகு பொருளை விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளார். பின் கடந்த 20ம் தேதி சொந்த ஊரான திருமலைப்பட்டிக்கு வந்துள்ளார். அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் எடையப்பட்டி வழியாக பேளுக்குறிச்சியில் உள்ள ஹரிஹரசுதனிடம் மிளகு விற்பனை செய்த தொகை ரூ.19 லட்சத்தை வழங்க சென்றார்.
அப்போது எடையப்பட்டி ஏரிக்கரை வழியாகசென்ற இருசக்கர வாகனத்தை மறித்த மர்ம கும்பல் ஜீவாவின் மீது மிளகாய் பொடியை தூவி ரூ.19 லட்சம், இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தலைமறைவாகினர். சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
போலீஸ் விசாரணையில் ஓட்டுநர் ஜீவா பணத்தை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடிக் கொண்டு கொள்ளை நடந்தது போல் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை நாடகமாடிய குப்பநாயக்கனூரை சேர்ந்த ஓட்டுநர் ஜீவா (25), அவரது கூட்டாளிகளான தமிழ் (எ) சுபாஷ் (26), லோகேஸ்வரன் (28), சுபாஷ் (26), சரவணகுமார் (எ) டான் (32) உள்பட ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் தலைமறைவாக உள்ள நபரை ஒருவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளையடித்த பணத்தில் கோவா மற்றும் பெங்களூருவில் கைதான நபர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.11 லட்சம் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT