Published : 30 May 2022 07:19 PM
Last Updated : 30 May 2022 07:19 PM

சென்னை | மேட்ரிமோனி மூலம் அறிமுகமாகி பெண்ணிடம் ரூ.29 லட்சம் ஏமாற்றியவரை பிடிக்க தனிப்படை

சென்னை: மேட்ரிமோனி நிறுவனம் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி ரூ.29 லட்சத்தை ஏமாற்றிச் சென்ற நபரை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் மேட்ரிமோனி நிறுவனத்தில், மறுமணத்திற்காக ஒரு பெண்ணின் ஒருவரின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த பெண்ணை மணந்துகொள்ள ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த அரவிந்த் சுப்ரமணியன் என்பவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணின் விவரங்களை அவரது பெற்றோர் அரவிந்த் சுப்ரமணியனுக்கு வழங்கியுள்ளனர்.

அரவிந்த் சுப்பிரமணியன் துபாயில் தொழில் செய்துவருவதாகக் கூறி அந்தப் பெண்ணிடம் அறிமுகமாகியுள்ளார். அந்தப் பெண்ணுக்கும் அரவிந்த் சுப்பிரமணியனைப் பிடித்துப்போக இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், தனது தொழில் சார்ந்த தேவைக்கு உடனடியாக பணம் தேவைப்படுவதால், அந்தப் பெண்ணிடம் உள்ள நகை மற்றும் பணத்தை கொடுக்கும்படி, அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தன்னை திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்தானே என்ற நம்பிக்கையில், அந்தப் பெண்ணும் நகைகள் மற்றும் ரூ.29 லட்சத்தை பாண்டிபஜாரில் வைத்து கொடுத்துள்ளார். பணம் நகைகளை வாங்கிய சிறிது நேரத்தில் தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு அரவிந்த் சுப்பிரமணியன் என்ற அந்த நபர் தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், சென்னைப் பெருநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து பணத்தை ஏமாற்றி வாங்கிச் சென்ற சென்ற நபரை தேடி வருகின்றனர்.

தியாகராய நகரில் உள்ள மேட்ரி மோனி அலுவலகத்தில் அரவிந்த் சுப்பிரமணியன் என்ற நபர் கொடுத்துள்ள முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x