Published : 25 May 2022 07:07 AM
Last Updated : 25 May 2022 07:07 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே, கணவர் கண்ணெதிரில் சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழந்தார்.
போச்சம்பள்ளி வட்டம் வீரமலை பகுதியைச் சேர்ந்தவர் வேலு(28). இவர் போச்சம்பள்ளி பகுதியில் செயல்படும் தனியார் ஷூ நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவர் மனைவி சங்கீதா (22). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. நேற்று முன் தினம் மாலை இவர்கள் இருவரும் காவேரிப்பட்டணம்-வேலம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
கண்ணன்கொட்டாய் பேருந்து நிறுத்த பகுதியில் சென்றபோது அவ்வழியே சென்று கொண்டிருந்த நகரப் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல வேலு முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதில், சாலையில் விழுந்த சங்கீதா மீது பேருந்து ஏறியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சங்கீதாவை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT