Published : 21 May 2022 07:42 AM
Last Updated : 21 May 2022 07:42 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரைச் சேர்ந்தவர் சரவணன்(58). இவரது மனைவி முத்துலட்சுமி(55). இவர்களுக்கு 2 மகன்கள். ஏற்கெனவே ஒரு மகன் உடல்நலக் குறைவால் இறந்துவிட்ட நிலையில், மற்றொரு மகனும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்த பூசாரி எம்.மணியிடம்(48) குறி கேட்டுள்ளனர். அவர், சரவணன் வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு, வீட்டுக்குள் உலோக சிலைகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். பின்னர், வேம்பூரைச் சேர்ந்த பி.ராசு(50), துவரங்குறிச்சியைச் சேர்ந்த எம்.முருகேசன்(50) ஆகியோரை பூசாரிகள் எனக் கூறி, 2 மாதங்களுக்கு முன்பு சரவணன் வீட்டுக்கு மணி அழைத்துச் சென்று, பூஜை நடத்தியுள்ளார்.
பூஜை முடிந்ததும், வீட்டுக்குள் புதைக்கப்பட்டிருந்து எடுத்ததாகக் கூறி பாம்பு, அம்மன் உள்ளிட்ட சில உலோக சிலைகளை சரவணனிடம் அவர்கள் கொடுத்து, நெல்லுக்குள் பாதுகாப்பாக வைத்து 15 நாட்கள் பூஜை செய்தால், சிலைகள் தங்கமாக மாறிவிடும் என்று கூறி, ரூ.80 ஆயிரத்தை பெற்றுச் சென்றுள்ளனர். அதன்படி, சரவணனும் முத்துலட்சுமியும் 2 மாதங்களுக்கு மேலாக அந்தச் சிலைகளுக்கு பூஜை செய்து வந்தபோதும், சிலைகள் தங்கமாக மாறவில்லை.
இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள், இதுகுறித்து மண்டையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலி சிலைகளைக் கொடுத்து ஏமாற்றிய மணி, ராசு மற்றும் முருகேசன் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து உலோகத்தாலான நாகம், முதலை, அம்மன் சிலைகள், நாணயங்கள், தட்டு போன்ற பொருட்களுடன், ரூ.80 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள், பூஜைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT