Published : 12 May 2022 06:04 AM
Last Updated : 12 May 2022 06:04 AM

வேலூர் | கணவரை கொலை செய்த மனைவி கைது

குமரவேல் (கோப்புப்படம்)

வேலூர்: வேலூரில் தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த மனைவி தனது கணவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதையடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் வேலப்பாடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (60) லாரி ஷெட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கோமதி (48). வேலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. இளைய மகள் வேலூரில் உள்ள கல்லூரியில் இளங்கலை படித்து வருகிறார்.

குமரவேல் வேலைக்கு செல்லாமல் தினசரி மது அருந்தி விட்டு ஊர்சுற்றி வந்ததாக தெரிகிறது. மது போதையில் வீட்டுக்கு வரும் குமரவேல் தனது மனைவி கோமதி மற்றும் இளையமகளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த குமரவேல், தனது மனைவி கோமதியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த குமரவேல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கோமதியை வெட்டினார். அதில், அவரது முகம், நெற்றி உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. உயிர் தப்பிக்க எண்ணிய கோமதி தனது கணவரிடம் இருந்த கத்தியை பறித்து குமரவேலை வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே குமரவேல் பரிதாபமாக உயிரிழந்தார். கோமதியின் வீட்டுக்குள் சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

அதில், குமரவேல் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

காவல் துறையினர் விசாரணை

இது குறித்து தகவலறிந்ததும், வேலூர் தெற்கு காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். வெட்டுக் காயங்களுடன் இருந்த கோமதியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிறகு உயிரிழந்த குமரவேல் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைகாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x