Published : 08 Apr 2022 06:52 AM
Last Updated : 08 Apr 2022 06:52 AM

பருப்பு வியாபாரியிடம் போலி ரேஷன் கடைகளை காட்டி ரூ.3.65 கோடி நூதன மோசடி செய்தவர் கைது: தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை பிடிக்க தனிப்படை

பாண்டியராஜன்

சென்னை: தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் என்.ஆர்.பாலாஜி (46). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ‘பருப்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். நண்பர் மூலம் திருவல்லிக்கேணி, பழனியப்பன் கோயில் வடக்கு 3-வது தெருவை சேர்ந்த பாண்டியராஜன்(44) என்பவர் அறிமுகமானார்.

அவர், பெண் உட்பட மேலும் 4 பேருடன் இணைந்து ‘கிஷான் ரேஷன் ஷாப்’ என்ற ரேஷன் கடை போன்ற கடைகளை ஆரம்பித்து விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து அதைச் சில்லறை விற்பனை செய்யப்போவதாகவும், மொத்த வியாபாரிகளிடமிருந்து பருப்பு போன்ற பொருட்களைக் கொள்முதல் செய்ய உள்ளதாகவும் என்னிடம் கூறினார்.

மேலும், மத்திய அரசால் வழங்கப்பட்டது போன்ற போலியான ஒப்பந்த ஆணைகளையும் காண்பித்தார். இதை நம்பி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பல்வேறு தவணைகளில் அவர்களுக்கு ரூ.3.65 கோடி மதிப்புள்ள பருப்பு, பயிறு வகைகளை சப்ளை செய்தேன். ஆனால், அதற்கான பணத்தை அவர்கள் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர். எனவே, பாண்டியராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாண்டியராஜனை போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடி குறித்து போலீஸார் கூறும்போது, “கைது செய்யப்பட்ட பாண்டியராஜன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து போலியான ஆவணங்களைக் காட்டி பல கோடி மதிப்பிலான பருப்பு மற்றும் பயிறு வகைகளைக் கொள்முதல் செய்துள்ளார். அதற்கான தொகை மத்திய அரசின் திட்டத்திலிருந்து 45 நாட்களில் வியாபாரிகளின் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும் எனக்கூறி விருதுநகர், கோவை போன்ற ஊர்களில் உள்ள வியாபாரிகளிடம் மோசடி செய்துள்ளார். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் ஜெய் கணேஷ், முருகேசன், ஹரிகரன், உமா ஆகிய 4 பேரைத் தனிப்படை அமைத்துத் தேடி வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x