Published : 08 Apr 2022 06:58 AM
Last Updated : 08 Apr 2022 06:58 AM
சுப்புலட்சுமி: ராஜபாளையம் அருகே 4 ஆண்டுகளாகப் போலீஸாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக மனைவி, மைத்துனரை போலீஸார் கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் குட்டி என்ற மாடசாமி. இவரது மனைவி சுப்புலட்சுமி. ரவுடியான மாடசாமி மீது 20 கொலை வழக்குகள் இருந்தன. தலைமறைவாக இருந்த இவரை கடந்த 4 ஆண்டுகளாக போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 4-ம் தேதி சுப்புலட்சுமியிடம், தான் பிறரிடம் இருந்து கடனாக வாங்கிக் கொடுத்த ரூ.2 லட்சத்தை திருப்பித் தருமாறு மாடசாமியின் அக்கா ராஜேஸ்வரி வலியுறுத்தினார். தகராறு முற்றியதில் இருவரும் காயமடைந்தனர்.
இது குறித்து சுப்புலட்சுமி சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் இரு தரப்பையும் அழைத்து விசாரித்தனர். அப்போது சுப்புலட்சுமி அளித்த மனுவில், தனது கணவர் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் எப்போது இறந்தார், எப்படி இறந்தார் எனப் போலீஸார் விசாரித்தனர். சுப்புலட்சுமி முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சுப்புலட்சுமியும், அவரது தம்பி விஜயகுமாரும் சேர்ந்து மாடசாமியை 2 ஆண்டுகளுக்கு முன்பு அடித்துக் கொன்று, உடலை புத்தூர் மலையடிவாரத்தில் புதைத்தது தெரிய வந்தது. கடன் வாங்கித் தரச் சொல்லி மாடசாமி அடித்துத் துன்புறுத்தியதால், அவரை கொலை செய்ததாக சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ராஜபாளையம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் புத்தூர் மலையடிவாரப் பகுதியில் தோண்டிப் பார்த்தபோது எலும்புக்கூடுகள் கிடைத்தன.
இதுதொடர்பாக சேத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுப்புலட்சுமி, விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT