Published : 02 Apr 2022 06:49 AM
Last Updated : 02 Apr 2022 06:49 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 திருட்டு வழக்குகளில் 9 பேர் கைது: ரூ.7.40 லட்சம் நகை, பணம், பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 4 திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.7.40 லட்சம் மதிப்பிலான நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குளில் ஈடுபடுபவர்களை கண்டறியும்பொருட்டு அனைத்து துணை கோட்ட டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி 4 திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சோமசேகர் மனைவி லெட்சுமி பிரியா (24) என்பவரது வீட்டில் கடந்த மார்ச் 2-ம்தேதி மர்ம நபர்கள் புகுந்து 10.5 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். இது தொடர்பாக லெட்சுமி பிரியா நேற்று முன்தினம் தட்டப்பாறை போலீஸில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி அதே ஊரைச் சேர்ந்த சுப்பம்மாள் (48), அவரது கணவர் மாணிக்கம் (56) மற்றும் இவர்களது மகள் பத்திரம்(30) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.3.10 லட்சம் மதிப்பிலான 10.5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

கடம்பூர் அருகே ஓணாமான்குளம் பகுதியில்உள்ள தனியார் சோலார் கம்பெனியில் இருந்துகடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி ரூ.90 ஆயிரம்மதிப்புள்ள காப்பர் வயர்களை திருடிய வழக்கில்கடம்பூர் போலீஸார் விசாரணை நடத்தி, கடம்பூரைச் சேர்ந்த ரமேஷ் (39) என்பவரை கைது செய்து, ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தபட்ட சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கயத்தாறைச் சேர்ந்த கணபதி பாண்டியன் (52) என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் நேற்று முன்தினம் ரூ.2.40 லட்சம் பணம் திருடு போன வழக்கில் கயத்தாறு போலீஸார் விசாரணை நடத்தி, கோவில்பட்டி காமராஜ் நகரை சேர்ந்த கணேசன் (58) என்பவரை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.

எட்டயபுரம் அருகேயுள்ள கழுகாசலபுரம் பகுதியில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள கருவிகளை திருடிய வழக்கில், பசுவந்தனை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் (35), சின்னத்துரை (43), ஜமீன் இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (32) மற்றும் சிவகாசி, சின்னல்பொட்டல்பட்டி பகுதியை சேர்ந்த சங்கரேஸ்வன் (31) ஆகிய 4 பேரையும்

எட்டயபுரம் போலீஸார் கைது செய்து, திருடப்பட்ட கருவிகளை பறிமுதல் செய்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x