Published : 30 Jul 2024 07:11 AM
Last Updated : 30 Jul 2024 07:11 AM
திருச்சி: இன்ஸ்டாகிராம் பதிவால் ஏற்பட்ட பிரச்சினையில் ஸ்ரீரங்கத்தில் உள்ள பள்ளியில் வகுப்பறைக்குள் புகுந்து மாணவரையும், தடுத்த ஆசிரியரையும் கத்தியால் வெட்டிய சக மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகபணியாற்றி வரும் திருவானைக் காவல் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த சிவக்குமார் (55) நேற்று பிற்பகல், பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென வகுப்பறைக்குள் சீருடை அணியாமல் முகமூடி அணிந்தபடி வந்தஒரு நபர், ஒரு மாணவரின் பெயரைச் சொல்லி அழைத்துள்ளார். அதற்கு ஆசிரியர் சிவக்குமார், ‘நீ யார்? எதற்கு வந்துள்ளாய்?’ என கேட்பதற்குள், தான் கொண்டு வந்த கத்தியால், அந்த மாணவரை சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க முயன்ற ஆசிரியர் சிவக்குமாரையும் அந்த நபர் தலையில் வெட்டியுள்ளார். இதனால் சக மாணவர்கள் சத்தம் போடவே அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்த தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸார் பள்ளிக்குச் சென்று காயமடைந்த மாணவர், ஆசிரியரை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணை யில் தெரிய வருவதாவது: இப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவரின் (பாதிக்கப்பட்டவர்) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளபதிவுக்கு, அதே பள்ளியில் பிளஸ் 2படிக்கும் மற்றொரு மாணவர் கிண்டலாக கமென்ட் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டலாக பதிவு செய்திருந்த மாணவர், வகுப்பறைக்குள் புகுந்து சக மாணவரையும், ஆசிரியரையும் கத்தியால் வெட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, கத்தியால் வெட்டிய மாணவரை தேடி வருகின்றனர்.
மேலும், திருச்சி மாவட்டக் கல்விஅலுவலர் சங்கர நாராயணன் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT