Published : 26 Jun 2024 08:48 AM
Last Updated : 26 Jun 2024 08:48 AM

சென்னையில் ரவுடியை கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய கும்பல்

சென்னை: ரவுடியை கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிச் சென்ற கும்பலை கோட்டூர்புரம் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தின் (அடையாறு ஆறு) அடியில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரது சடலம் மிதப்பதாக நேற்று காலை கோட்டூர்புரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடம் விரைந்து, தீயணைப்பு படையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, இறந்து போன நபரின் முகம், கழுத்து, வலது கால்மணிக்கட்டு உட்பட 6 இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது. எனவே, இந்த இளைஞரை கொலை செய்து யாரோ சடலத்தை ஆற்றில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் சடலமாக மிதந்தவர் சென்னை கண்ணகி நகரில் உள்ள எழில் நகரைச் சேர்ந்த ஆகாஷ் என்ற டோரி ஆகாஷ் (27) என்பது தெரியவந்தது.

பல்வேறு வழக்குகள்: ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. எனவே, முன் விரோதம் காரணமாக இவரை கொலை செய்து ஆற்றில் வீசினார்களா? அல்லது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்டமாக கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x