Published : 27 May 2024 06:04 AM
Last Updated : 27 May 2024 06:04 AM
சென்னை: போலீஸாரின் வாகன சோதனையில் ராஜஸ்தான் இளைஞர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், தலைமைக் காவலர் செந்தில் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதி மன்னப்பன் தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவரை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ரூ.15 லட்சம் பணம் இருந்தது. அது ஹவாலா பணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
தொடர்ந்து இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அனுமன் மால் குமார் (38), மனோஜ் குமார் (27) என்பது தெரியவந்தது. தங்களது முதலாளியான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம் சிங் என்பவர், வட நாட்டவரின் திருமண நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாக ஸ்வீட் செய்து கொடுக்கும் தொழில் செய்து வருவதாகவும், அவர் கூறியபடி தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே ஒருவரிடமிருந்து ரூ.15 லட்சம் பணத்தை பெற்று வந்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
அந்த பணத்துக்கு எந்த ஆவணங்களும் இல்லாததால் அதை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீஸார் ஒப்படைத்தனர். பிடிபட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT