Published : 11 Feb 2024 04:00 AM
Last Updated : 11 Feb 2024 04:00 AM
சென்னை: பெற்றோருக்கு பணம் அனுப்பாமல் பிரியாணி வாங்கி சாப்பிட்ட மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய ராஜ் ( 31 ). இவரது மனைவி இலக்கியா, வேளச்சேரி வணிக வளாகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இருவரும் வேளச்சேரியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். பணியில் இருந்து தாமதமாக வரும் போதும், உடல் நலக் குறைவு ஏற்படும் போதும் கணவரிடம் பணம் கொடுக்கும் இலக்கியா, பிரியாணி வாங்கி வரச் சொல்லி இருவரும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
கடந்த 2019 நவ.30-ம் தேதி இரவும் அது போல பிரியாணி வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டதால் அதற்கு பணம் ஏது என ஜெய ராஜ் கேட்ட போது ஜெய ராஜின் பெற்றோருக்கு பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டதால் தற்போது நல்ல சாப்பாடு சாப்பிடுவதாக இலக்கியா தெரிவித்துள்ளார். இதில் இருவருக்கு மிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த இலக்கியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.
பின்னர் இருவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் கண் விழித்த ஜெய ராஜ், இலக்கியாவை கொலை செய்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது போல பிறரை நம்ப வைத்துள்ளார். இது தொடர்பாக இலக்கியாவின் வளர்ப்புத் தாய் மணி மொழி அளித்த புகாரின் பேரில் கிண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெய ராஜை கைது செய்தனர்.
குற்றச்சாட்டு நிரூபணம்: இந்நிலையில் இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் பி.ஆர்த்தி ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, ஜெய ராஜ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது எனக்கூறி அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதில் ரூ. 10 ஆயிரத்தை இலக்கியாவின் வளர்ப்புத் தாய் மணி மொழியிடம் வழங்கவும், அவருக்கு கூடுதல் இழப்பீடு பெற்று கொடுக்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT