Published : 10 Feb 2024 06:05 AM
Last Updated : 10 Feb 2024 06:05 AM

13 பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்; இ-மெயில் வெளிநாட்டிலிருந்து வந்தது கண்டுபிடிப்பு

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இ-மெயில், வெளிநாட்டிலிருந்து வந்தது தெரியவந்தது. எனவே, மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய தேவைப்பட்டால் சர்வதேச போலீஸாரின் உதவியையும் சென்னை போலீஸார் நாட முடிவு செய்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயில் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் இதுகுறித்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான போலீஸார், வெடிகுண்டு நிபுணர்களை சம்பந்தப்பட்ட 13 தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்துசோதனை நடத்தினர். ஆனால்,எந்த வெடிபொருட்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து,மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் பெற்றோர் அச்சமடைந்து பள்ளிகளுக்கு விரைந்து, பிள்ளைகளை அழைத்துச் சென்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த மிரட்டல் விவகாரம் தொடர்பாக சென்னை மத்தியகுற்றப்பிரிவில் உள்ள சைபர்க்ரைம் போலீஸார் விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக மிரட்டல் இ-மெயில் முகவரியை ஆய்வு செய்தபோது அது இந்தியாவிலிருந்து வரவில்லை என்பதும், வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது. அது சுவிட்சர்லாந்தாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே, தேவை ஏற்பட்டால் குற்றவாளியைக் கைது செய்ய சர்வதேசபோலீஸாரின் உதவியை நாடவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து காவல் ஆணையர் சந்தீப் ராய்ரத்தோர் கூறுகையில், ``ஒரே நாளில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைவில் கைது செய்வோம். மிரட்டல் விவகாரத்தில் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். பதற்றத்தை உருவாக்கவும் வேண்டாம். விசாரணை குறித்த விவரங்களை வெளியிட இயலாது. கைது நடவடிக்கைக்குப் பின்னர் முழு விவரமும் வெளியிடப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x