Published : 25 Jan 2024 06:49 PM
Last Updated : 25 Jan 2024 06:49 PM

உங்கள் கைபேசி தொலைந்தால் உஷார்! - யுபிஐ மூலம் நூதன முறையில் பணம் திருடுவதாக புகார்

வேலூர்: பொதுமக்களிடம் இருந்து திருடப்படும் கைபேசிகளின் யுபிஐ செயலி வழியாக நூதன முறையில் மோசடி நபர்கள் பணம் திருடுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, கைபேசி திருடப்பட்டாலோ அல்லது காணமல் போனாலோ உடனடியாக சிம்கார்டை செயலிழக்க செய்யுமாறு சைபர் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவீன உலகில் கைபேசிகளின் பயன்பாடு அளவிட முடியாத இடத்தை பிடித்துள்ளது. உலகை உள்ளங்கையில் அடக்கிய பெருமை கைபேசிகளையே சேரும் என கூறலாம். இந்தியாவில் உள்ள மக்கள் தொகையைவிட கைபேசிகள் எண்ணிக்கை அதிகம் என்றே கூறலாம். கைபேசி பயன்பாடு தொடங்கியதில் இருந்து அது தொடர்பான சைபர் குற்றங்களும் புதுப்புது வடிவங்களில் நம்மை துரத்திக் கொண்டிருக்கின்றன.

கைபேசி வழியான இணைய செயல்பாடு கூர்மையான கத்தியை போன்றது. அதை நாம் நல்ல விதமாகவும் பயன்படுத்த முடியும். கெட்ட காரியங்களுக்கும் பயன்படுத்த முடியும். அந்தளவுக்கு மனித இயக்கத்தை காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் பயணித்துக் கொண்டி ருக்கிறது.

இந்தியாவில் கைபேசி பயன்பாடு டிஜிட்டல் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளன. டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியான காகிதம் இல்லாதபணப்பரிமாற்றம் பொதுமக்களுக்கு ஒரு பக்கம் சுலபமாக இருந்தாலும், அதனால் ஏற்படும் ஆபத்துகளும் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன.

அடையாளம் தெரியாத நபர்கள் வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி வங்கி விவரங்களை பெற்று வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபகறிப்பது, இணையத்தில் உலாவரும் உடனடி கடன் செயலிகள் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவது, பகுதிநேர வேலை எனக்கூறி இளைஞர்களை நம்ப வைப்பதும், பணத்தை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்வது என ஏராளமான வடிவங்களில் இணையவழி குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

தேசிய குற்றப்பதிவு பணியகம் (என்சிஆர்பி) தரவுகளின்படி நாடு முழுவதும் சைபர் குற்றவழக்குகள் 2020-ம் ஆண்டில் 50 ஆயிரத்து 35 வழக்குகள், 2021-ம் ஆண்டில் 52 ஆயிரத்து 974 வழக்குகள், 2022-ம் ஆண்டில் 65 ஆயிரத்து 893 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதில், கைபேசி செயலி வழியாக பணப்பரிமாற்ற மோசடிகளில் புதிய வடிவமாக யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் நடைபெறும் மோசடி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளன. அதாவது, திருடப்படும் கைபேசிகளில் இருக்கும் ஜி-பே, போன்-பே போன்ற செயலி வழியாக பணம் திருடப்படும் புகார்கள் சைபர் குற்றப்பிரிவுக்கு வரத் தொடங்கியுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘இந்தியாவில் சாதாரண கைபேசிகளின் பயன்பாட்டை காட்டிலும் ஸ்மார்ட் கைபேசிகளின் பயன்பாடு அதிகளவில் இருக்கின்றன. ஒரு வீட்டில் இருக்கும் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் கைபேசி இருப்பதை பார்க்க முடிகிறது. அனைவரும் காகிதம் இல்லாத டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு, யுபிஐ எனப்படும் நடைமுறை மிக எளிதாக உள்ளது. இந்த யுபிஐ வழி பணப் பரிவர்த்தனைகளுக்கு கைபேசி எண்கள் மூலமாகத்தான் இருக்கிறது. கைபேசி எண் செயல்பாட்டில் இருந்தால் எந்த கைபேசியில் இருந்தபடியும் ஜி-பே, போன்-பே போன்ற செயலிகளை புதிதாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் கைபேசி செயலிகளை பயன்படுத்திய பிறகு லாக்-அவுட் என்ற நடைமுறையை பின்பற்றுவதில்லை. இது மோசடி நபர்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருப்பதால் உடனடியாக பணத்தை ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றிக்கொள்கின்றனர்.

மேலும், யுபிஐ மூலம் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் நோக்கத்திலேயே கைபேசிகள் திருடப்படுகின்றன. அவ்வாறு, கைபேசிகள் திருடப்பட்டால் அல்லது காணாமல் போனால் உடனடியாக உங்களின் கைபேசி நெட்ஒர்க்கை தொடர்புகொண்டு சிம்கார்டை செயலிழக்க செய்தால் போதுமானது.

இணையவழி குற்றங்களை தடுக்க உடனடியாக சைபர் குற்றப்பிரிவினை 1930 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு, சிம் கார்டினை வேறுயாரும் பயன்படுத்த முடியாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

திருடப்படும் கைபேசிகளில் இருக்கும் ஜி-பே, போன்-பே போன்ற செயலி வழியாக பணம் திருடப்படும் புகார்கள் சைபர் குற்றப்பிரிவுக்கு வர தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x