Published : 25 Jan 2024 05:06 PM
Last Updated : 25 Jan 2024 05:06 PM

மதுரை கீழக்கரை அரங்கில் எப்படி இருந்தது முதல் ஜல்லிக்கட்டு? - ஹைலைட்ஸ்

தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேலரியில் அமர்ந்து போட்டியை உற்சாகமாக கண்டு ரசித்த பார்வையாளர்கள்.

மதுரை: முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்த கீழக்கரை அரங்கில் ஜல்லிக்கட்டுப் போட்டி திருவிழாபோல் கோலாகலமாக நடந்தது. பராம்பரிய ஜல்லிக்கட்டுப் போட்டிகளை போல் புதிய அரங்கின் வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கி சிறப்புப் பரிசுகளை அள்ளினர். சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரருக்கு ஜீப், ரூ.1 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் தமிழக அரசு புதிதாக கட்டிய ஜல்லிகட்டு அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார். தொடர்ந்து அந்த புதிய அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளைப் போல், இந்தப் போட்டியும் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டது. ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போட்டிகளைக் கண்டுரசித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாடுபிடி வீரர்களையும், காளை உரிமையாளர்களையும் உற்சாகப்படுத்தினார். அவர் சென்றபிறகு அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

மொத்தம் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்தப் புதிய அரங்கில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக நிர்நதரமாகவே வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர்கள் மாடம், பரிசுப் பொருட்கள் மாடம் மற்றும் பார்வையாளர் பகுதியில் காளைகள் புகாமல் இருக்க இரண்டடுக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. காளைகளும், வீரர்களும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே ஜல்லிக்கட்டு களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இப்போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி சார்பில் தலா 1 ஜீப் கார் (Mahindra thar jeep), ரூ.1 லட்சம் ரொக்கம், 2-வது இடம் பெறும் காளைக்கும், வீரருக்கும் தலா ஒரு பைக் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம்பரிசாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதனால், தொடக்கம் முதல் கடைசி வரை போட்டி விறுவிறுப்பாக இருந்தது. போட்டியில் தமிழகத்தின் தலைசிறந்த காளைகள் மட்டுமே பங்கேற்றதால் புதிய அரங்கின் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஒவ்வொரு காளைகளும், ஜல்லிக்கட்டு களத்தில் சீறிப் பாய்ந்தன. மாடுபிடி வீரர்கள், காளைகளை அடக்குவதற்கு மிகுந்த சிரமம் அடைந்தனர். திமில்களைப் பிடித்து அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களை காளைகள் தூக்கி வீசிப் பந்தாடின. சில மாடுகள், வீரர்களைக் கொம்புகளில் தொங்கவிட்டு சுற்றி வீசியது.

பக்கத்தில் நெருங்கவே விடாமல் ஜல்லிக்கட்டு களத்தில் கால்களால் புழுதி வாரி போட்டுக் கொண்டு, கொம்புகளைக் காட்டி மிரட்டிய காளைகளை மாடுபிடி வீரர்கள், சில நேரங்களில் தைரியமாக எதிர்த்து நின்று அதன் திமில்களைப் பிடித்து அடக்கி சிறப்புப் பரிசுகளை அள்ளிச் சென்றனர். காயமடைந்த வீரர்களை முதலுதவி மீட்புக் குழுவினர் போலீஸார் உதவியுடன் ஸ்டெச்சரில் எடுத்துச் சென்று, அரங்கினுள் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை வழங்கி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போட்டியின்போது, ஒவ்வொரு முறையும் சிறப்பாக ஆடி காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், நின்று விளையாடி, மாடுபிடி வீரர்களை புறமுதுகு காட்டி ஓடவிட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஒரு பவுன் மோதிரம், தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயம் முதல் விலை உயர்ந்தசைக்கிள், பீரோ, ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன.

பிடிக்க வந்ததால் ஆக்ரோஷமாகி வீரர்களை சிதறியடித்த காளை.

இந்தப் புதிய அரங்கில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பார்வையிடுவதற்கு வசதி உள்ளது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அரங்கை திறந்துவைத்துப் போட்டியைத் தொடங்கி வைக்க வருகை தந்ததால் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களைத் தாண்டி, திமுகவினரும் அதிகளவு வருவார்கள் என்பதால் தற்காலிகமாக 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் தனி பார்வையாளர் மாடமும் அமைக்கப்பட்டிருந்தது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்க்க மதுரை மாவட்டத்தின் அனைத்து முக்கியப் பகுதிகளில் இருந்தும் கீழக்கரை அரங்குக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வரும் காலத்தில் அதிகளவுக்கு பார்வையாளர்கள் வருகை தரும்போது சுழற்சி முறையில் போட்டியைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் புதிதாகக் கட்டப்பட்ட
ஜல்லிக்கட்டு அரங்கில் நடந்த போட்டியில் காளையிடம் சிக்கிக்கொண்ட
வீரரை மீட்க முயன்ற சக வீரர்கள்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கேலரியில் அமர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க மாற்றுத் திறனாளிகள் 200 பேர் பார்க்க நேற்று ஏற்பாடு செய்து அவர்கள் அரங்குக்கு அழைத்து வரப்பட்டனர். மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி தலைமையில், காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் மேற்பார்வையில் 2,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஹைலைட்ஸ்:

# முதல்வர் மு.க.ஸ்டாலினை வர வேற்கும் வகையில் அலங்கா நல்லூரில் இருந்து ஜல்லிக்கட்டு அரங்கம் உள்ள கீழக்கரை அரங்கு வரை கட்சிக்கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. அரங்குக்கு முன் சுமார் 1 கி.மீ, தொலைவுக்கு கரும்பு, வாழை மரங்கள் தோரணம் கட்டியிருந்தனர்.

# ஜல்லிக்கட்டு அரங்கில் நிறுவப்பட்ட கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

# அரங்கை காலை 10.20 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. வழக்கமாக ஜல்லிக் கட்டுப் போட்டிகள் காலை 7.30 மணியளவிலே தொடங்கி விடும். இந்தப் போட்டிகளை தொடங்கி வைக்க வரும் முதல்வர், அமைச்சர்கள் முந்தைய நாளே மதுரை வந்து தங்கியிருப்பார்கள்.

# ஜன.17-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க வந்த அமைச்சர் உதயநிதி முந்தைய நாளே மதுரை வந்திருந்தார்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 8.20 மணிக்குத்தான் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார்.

# நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்ததால் திறந்த வெளி கேலரியில் அமர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட ஆண்கள், பெண்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். அவர்கள் கேலரியில் அமர்ந்தபிறகு கழிப்பறைக்கோ, குடிநீர் அருந்தவோ எழுந்து செல்ல முடியவில்லை. அந்தளவுக்குத்தான், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அந்த கேலரி இருந்தது.

ஆனால், ஜல்லிக்கட்டு அரங்கில் நிரந்தர கேலரியில் விஐபிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சவுகரியமாக அமர்ந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் காலை 10.35 மணிக்குத்தான் நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு வந்தார். அதனால், சுமார் 2 மணி நேரமாக மக்கள் வெயிலில் கேலரியில் அமர்ந்தவாறு தவித்தனர். முதல்வர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்றபிறகு திறந்த வெளி கேலரியில் அமர்ந்திருந்த கிராம மக்கள், பெரும் பாலானோர் புறப்பட்டுச் சென்று விட்டனர்.

# 5 ஆயிரம் பேர் வரை போட்டி யைப் பார்வையிட புதிய ஜல்லிக் கட்டு அரங்கில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலத்தில் அதிகமாக பார்வையாளர்கள் வருகை தரும்போது சுழற்சி முறையில் போட்டியை பார்ப்பதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட உள்ளன. பார்வையாளர்களுக்குத் தேவை யான குடிநீர், கழிப்பிட வசதிகளும், காளைகளுக்குத் தீவனங்களும், ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன.

# வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அமருவதற்கு புதிய அரங்கில் சிறப்பு கேலரி அமைக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கில் நேற்று நூற் றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டு ரசித்தனர். அவர்களுக்கு காலை உணவு, குடிநீர் பாட்டில் மற்றும் பிஸ்கட்டுகள் சுற்றுலாத் துறை சார்பில் வழங் கப்பட்டு உபசரிக்கப்பட்டனர்.

# புதிய ஜல்லிக்கட்டு அரங்கில் போட்டிகள் போட்டியைக் காண வந்த சின்னத்திரை நடிகர்கள், இளைஞர்கள், முகநூலில் நேரடியாக ஒளிபரப்புச் செய்து போட்டி நடந்த இடத்தைக் காட்டினர்.

# ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை 10.40 மணிக்கு தொடங்கி மாலை 5.40 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. 4 பெண்கள் உட்பட 10 பார்வையாளர்கள், 15 மாடுபிடி வீரர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர்.

அபிசித்தர் அசத்தல்: அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் தவறவிட்ட முதல் இடத்தை கீழக்கரை ஜல்லிக் கட்டு போட்டியில் நேற்று 10 காளைகளை அடக்கி முதலிடம் பெற்று அசத்தினார். அவரது விடா முயற்சியை ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், பார்வையாளர்களும் கைதட்டி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் நேற்று நடந்த போட்டியில் 8 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்தார். இவருக்கு முதல்வர் சார்பில் `மகேந்திரா தார்' சொகுசு ஜீப் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இவர், சமீபத்தில் நடந்து முடிந்த அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 17 காளைகளை அடக்கி முதல் பரிசை மயிரிழையில் தவற விட்டிருந்தார். முதலிடம் பிடித்த கார்த்திக் என்பவர் 18 காளைகளை அடக்கியிருந்தார். ஆனால், விழாக் குழுவினர் கார்த்திக்குக்கு ஆதரவாக ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டதாக கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என அதிருப்தியில் இருந்தார். மேலும், விழாக் குழு சார்பில் அலங்கா நல்லூரில் வழங்கப்பட்ட பரிசைப் பெறாமல் புறக்கணித்தார்.

இச்சம்பவம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று கீழக்கரை ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு முதல் பரிசைப் பெற்று, தான் சிறந்த மாடுபிடி வீரர் என்பதை நிரூபித்துள்ளார். அபிசித்தர், ஏற்கெனவே 2023-ம் ஆண்டு அலங்கா நல்லூரில் அதிக காளைகளை அடக்கி முதல் பரிசாக கார் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x