Published : 28 Dec 2023 05:19 AM
Last Updated : 28 Dec 2023 05:19 AM

பெசன்ட் நகர் கடற்கரை உட்பட சென்னையில் 30 இடங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்: டிஜிபி அலுவலகத்துக்கு மர்ம நபர் மின்னஞ்சல்

சென்னை: சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழக காவல் துறையின் தலைமை அலுவலகமான டிஜிபிஅலுவலகம் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை எதிரே உள்ளது. இந்த அலுவலக இ-மெயில் முகவரிக்கு நேற்று இ-மெயில் ஒன்று வந்தது. செந்தில் என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தகடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது: போலீஸாருக்கு அவசர தகவல். சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டுகள் வைத்துள்ளேன். முதல் வெடிகுண்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள நினைவு தூண் அருகே 2 கிலோ கிராம் எடையில் வைத்துள்ளேன். அது வெடிக்காமல் இருக்க அதை கவனமாக கையாண்டு அப்புறப்படுத்துங்கள்.

குண்டு வைக்கப்பட்ட மீதம் உள்ள இடங்களை தெரிவிக்க வேண்டும் என்றால் 2,500 பிட் காயின்களை (ஒரு பிட் காயினின் தோராய மதிப்பு ரூ.35.69 லட்சம்) நான் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கு எண் இணைப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும். இல்லை என்றால் எந்த இடம் என தெரிவிக்க மாட்டேன்’ என மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து முதல் கட்டமாக சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் மிரட்டல் கடிதம் வந்த இ-மெயில் முகவரி யாருடையது என விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பெசன்ட்நகர் கடற்கரையில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, வெடிகுண்டுகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, வதந்தியை பரப்பும் நோக்குடன் மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x