Published : 07 Nov 2023 04:10 AM
Last Updated : 07 Nov 2023 04:10 AM

வேலூர் கோட்டை அகழியில் மூட்டை கட்டி வீசப்பட்ட "போலீஸ் இன்பார்மர்" கொலையில் 3 பேர் கைது

கொலை வழக்கில் கைதான அப்பு, ஜெய , பரத்.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: வேலூர் கோட்டை அகழியில் கடந்த செப்டம்பர் மாதம் கொலை செய்து மூட்டை கட்டி வீசப்பட்டவர் ரேணிகுண்டா காவல் துறையின் ‘இன்பார்மர்’ என தெரிய வந்துள்ளது. இந்த கொலையில் 8 பேருக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்துள்ள காவல் துறையினர் ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வேலூர் கோட்டை அகழியில் கடந்த செப்.19-ம் தேதி உயிரிழந்த நிலையில் ஆண் உடல் மிதந்தது. இது குறித்த தகவலின் பேரில் வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனி வாசன் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று விசாரித்தனர்.

அதில், கொலையானவர் குறித்த தகவல் எதுவும் இல்லாத நிலையில் அவரது கழுத்து நெரிக்கப்பட்டும், கற்களால் தாக்கியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், கொலையானவரின் உடலில் கல்லை கட்டியதுடன் சிகப்பு நிற தரைவிரிப்பில் சுற்றப் பட்டு அகழியில் வீசப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் யார்? எந்த ஊர்? என தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக 2 தனிப்படைகளை அமைத்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர். கோட்டையை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தையும் ஆய்வு செய்தும் கொலையாளிகள் மற்றும் கொலையானவர் குறித்த எந்த தகவலும் தனிப்படையினருக்கு கிடைக்கவில்லை என்பதால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

இதற்கிடையில், வேலூர் பாகாயம் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி பரத் (31) என்பவர் குறித்த தகவல் தனிப்படையினருக்கு கிடைத்தது. பாகாயம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு கொண்ட அவர் வேலூர் கோட்டையில் கஞ்சா விற்பனை செய்து வருபவர் என்றும், காவல் துறையினரின் நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அத்தை மேரி என்பவரின் வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது.

வேலூருக்கு கடந்த சில மாதங்களாக வராத அவர் கடந்த செப்.15-ம் தேதி கோட்டை மைதானத்தில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து தனிப் படையினர் விசாரித்தனர். அதில், கோட்டையில் அகழியில் வீசப்பட்ட ஆண் கொலையில் தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டார்.

தொடர் விசாரணையில், கொலையானவர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவைச் சேர்ந்த செல்லா சிரஞ்சீவி (25) என்றும், ரேணிகுண்டா காவல் நிலைய ‘இன்பார்மர்’ என்பது தெரியவந்தது. பரத் கூறிய தகவலின் அடிப்படையில் செல்லா சீரஞ்சீவி கொலையில் தொடர்புடைய அப்பு (24), ஜெயஸ்ரீ (22) ஆகியோரை நேற்று கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வேலூர் காவல் துறையின் நெருக்கடி காரணமாக சித்தூரில் உள்ள அத்தை மேரியின் வீட்டில் பரத் வசித்து வந்தார். மேரிக்கு மகேஸ்வரி, காவ்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மகேஸ்வரியின் கணவர் விக்கி, காவ்யாவின் கணவர் மிட்டாய் அஜித்.

இவர்கள் அனைவரும் ஆந்திர மாநில ரயில் நிலையங்கள், ரயில்களில் செல்போன், பர்ஸ் திருடும் கும்பல். இவர்களை போன்றே சிறு, சிறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் செல்லா சிரஞ்சீவி. சித்தூர் சிறையில் இருந்தபோது மிட்டாய் அஜித்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்த திரும்பிய செல்லா சிரஞ்சீவி திருந்தி வாழ ஆசைப்பட்டதுடன், ரேணிகுண்டா காவல் துறையினருக்கு ‘இன்பார்ம ராக‘ (தகவல் அளிப்பவர்) மாறியுள்ளார்.

ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் தொடர் செல்போன் திருட்டு வழக்கு தொடர்பாக செல்லா சிரஞ்சீவி கொடுத்த தகவலின் பேரில் விக்கி, மிட்டாய் அஜித் உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் கைதுக்கு செல்லா சிரஞ்சீவி தான் காரணம் என்பதை இருவரும் தெரிந்து கொண்டனர். இதையடுத்து, அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

செல்லா சீரஞ்சீவிக்கு சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருடன் நெருக்கம் இருந்துள்ளது. அவர், அடிக்கடி வேலூர் வந்து செல்வதை செல்லா சிரஞ்சீவி மூலம் மிட்டாய் அஜித் தெரிந்து வைத்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் ஜெயஸ்ரீ மூலம் செல்லா சிரஞ்சீவியை வேலூர் வரவழைத்து கொலை செய்து அகழியில் வீசியுள்ளனர்.

இந்த கொலையில் பரத்துடன், விக்கி, மிட்டாய் அஜித், காளி என்ற லட்சுமணன், மாரிமுத்து, அப்பு (24), பத்ரி, ஜெயஸ்ரீ ஆகியோர் தொடர் புடையவர்கள். தற்போது, பரத், அப்பு, ஜெயஸ்ரீ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாரிமுத்து வேறு ஒரு வழக்கில் சென்னை புழல் சிறையில் உள்ளார். அதேபோல், பத்ரியும் வேறு வழக்கில் வேலூர் சிறையில் உள்ளார். விக்கி, மிட்டாய் அஜித், காளி என்ற லட்சுமணன் ஆகியோரை கைது செய்ய வேண்டியுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x