Published : 07 Nov 2023 04:00 AM
Last Updated : 07 Nov 2023 04:00 AM

மேட்டுப்பாளையம் அருகே யானை தந்தம் விற்க முயன்ற வன ஊழியர் உட்பட 8 பேர் கைது

வனத்துறையினர் பறிமுதல் செய்த ஒரு போலி தந்தம் மற்றும் அசல் தந்தம்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே யானை தந்தம் விற்க முயன்ற வேட்டை தடுப்பு காவலர் உட்பட 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் யானை தந்தங்கள் விற்பனை நடைபெறுவதாக மத்திய வனம் மற்றும் வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவு, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு ஆகியவை கடந்த 3-ம் தேதி கொடுத்த தகவல் அடிப்படையில், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், மறைந்திருந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், பிளாக் தண்டர் அருகே கீழ் கோத்தகிரியை சேர்ந்த எம்.பிரதிஷ், சிறுமுகையைச் சேர்ந்த சின்ன பாண்டி ஆகியோர் விற்பனை செய்வதற்காக, கட்டை பையில் மறைத்து வைத்திருந்த தந்தத்தை கோத்தகிரியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரிடம் காண்பிக்கும் போது, கையும், களவுமாக பிடிபட்டனர். தொடர்ந்து மூவரிடமும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: "பிரதிஷ், சின்னபாண்டி ஆகியோருடன் சோலூர் மட்டத்தைச் சேர்ந்த குணசேகரன், மனோஜ் ஆகியோர் சேர்ந்து, சுப்பிரமணியிடம் தந்தத்தை விற்பதற்காக விலை பேசியுள்ளனர். பிரதிஷ் சோலூர் மட்டத்தைச் சேர்ந்த ராஜ் குமாரிடம் இருந்து தந்தத்தை வாங்கியுள்ளார். ராஜ்குமாருக்கு, கரிக்கையூரைச் சேர்ந்த நஞ்சுண்டன் என்பவர் தந்தத்தை கொடுத்துள்ளார்.

நஞ்சுண்டனை விசாரித்ததில், விளாமுண்டி வனச்சரகத்தில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலரான மணிகண்டன் என்பவர் யானை தந்தத்தை அளித்தது தெரியவந்தது. மணிகண்டனை விசாரித்தபோது, கடந்த 2017-ம் ஆண்டு தாம்புக்கரை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும்போது, அங்கு கிடந்த யானை தந்தத்தை எடுத்து மறைத்து வைத்திருந்ததாகவும், நஞ்சுண்டன் கேட்டதால் அதை அளித்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தந்தத்தை விற்க பயன்படுத்திய கார், இருக்கர வாகனம், மரக்கட்டையால் செய்யப்பட்ட ஒரு போலி தந்தம், முறிந்த நிலையில் இருந்த ஒரு அசல் யானை தந்தம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. வழக்கில் தொடர்புடையே 8 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x