Published : 08 Sep 2023 06:09 AM
Last Updated : 08 Sep 2023 06:09 AM
பல்லாவரம்: ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா(28). இவர் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அம்மு (24) என்ற பெண்ணை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டு, பல்லாவரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
பாடி பில்டரான சூர்யா, அகில இந்திய அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை பெற்றதாக கூறப்படுகிறது. உடற்பயிற்சி நேரம் போக மற்ற நேரங்களில் சூர்யா அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சூர்யா மதுப் பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் முறையாக வேலைக்குச் செல்லாமல் எந்நேரமும் சூர்யா மது போதையில் இருந்து வந்தார். இதை அம்மு கண்டித்ததால், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கர்ப்பிணியான தன்னை மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் செல்ல அம்மு கூறியபோது, அதை சூர்யா செவிமடுத்து கேட்காததால், மனமுடைந்த அம்மு, கணவருடன் கோபித்துக் கொண்டு சூர்யாவின் தாயுடன் அதே பகுதியில் தனியே வசித்து வந்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சூர்யா நேற்று அவரின் வீட்டில் மொட்டை மாடியில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக கையில் கத்தி வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்த பல்லாவரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த சூர்யாவை மடக்கிப் பிடித்து பல்லாவரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அங்கு அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் சூர்யா, காவல் நிலையத்தின் மொட்டை மாடிக்குச் சென்று, யாராவது அருகில் வந்தால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து பல்லாவரம் போலீஸார், தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், சூர்யாவின் தாய், மனைவி அம்மு ஆகியோர், சூர்யாவை கீழே இறங்கி வருமாறு வலியுறுத்தினர். பின்னர் 3 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு கீழே இறங்கி வந்தார். பின்னர் போலீஸார் அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்து, இனி மேல் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT