Published : 31 Aug 2023 08:41 AM
Last Updated : 31 Aug 2023 08:41 AM

மேற்கு வங்கத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகை கொள்ளை: 4 பேரை கைது செய்தது போலீஸ்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் நாடியாமாவட்ட ரனாகட், புருலியா மாவட்டம் நமோபராவில் பிரபலமான நிறுவனத்தின் நகைக் கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் ரனாகட்டிலுள்ள நகைக்கடைக்கு வந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர். விஷயம் அறிந்ததும் நகைக்கடைக்கு விரைந்த போலீஸார், கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு கொள்ளையர்களும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். துப்பாக்கிச் சண்டையின் முடிவில்கொள்ளையர்களில் பலர் தப்பியோடிவிட்டனர். 4 பேரைமட்டும் கைது செய்த போலீஸார்அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சில நகைகளை போலீஸார் மீட்டனர்.

இதுகுறித்து ரனாகட்டைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கொள்ளையடித்த நகைகளின் ஒரு பகுதியை நாங்கள்அவர்களிடமிருந்து மீட்டுள்ளோம். தப்பியோடிய மற்ற கொள்ளையர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களைக் கைது செய்வோம்" என்றார்.

இதேபோல் புருலியா நகரில் உள்ள நகைக்கடையில் நடந்த கொள்ளையில் மொத்தம் 8 கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர். 2 கடைகளையும் சேர்த்து அவர்கள் சுமார் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக மேற்கு வங்க போலீஸார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x