Published : 27 Aug 2023 04:02 AM
Last Updated : 27 Aug 2023 04:02 AM

போலி ஆவணத்தை ரத்து செய்ய லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் கைது: காஞ்சி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: போலியாக பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்ய லஞ்சம் வாங்கிய பதிவாளர், அலுவலக ஊழியர்கள் என 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டி அருகே 1 ஏக்கர் 50 சென்ட்பூர்வீக நிலம் உள்ளது .பத்மாவதியின் உடன் பிறந்த சகோதரர் பச்சையப்பன் என்பவர் போலி ஆவணங்களை தயார் செய்து தன்னுடைய பெயருக்கு அந்த இடத்தை பதிவு செய்து கொண்டார்.

இதை அறிந்த பத்மாவதியின் மருமகன் உலகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மேற்கண்ட போலி ஆவணங்களை ரத்து செய்யும் உத்தரவினை நீதிமன்றத்தில் பெற்றார். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளரை சந்தித்து நீதிமன்ற உத்தரவினை அளித்தார்.

நீதிமன்ற உத்தரவு காஞ்சிபுரம் அலுவலகத்தில் இருந்து வாலாஜா பாத் துணை பத்திரப் பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. நீண்ட நாட்கள் ஆகியும் இதன் மீதுநடவடிக்கை எடுக்காத காரணத்தால் உலகநாதன் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட பத்திரப்பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். அப்போது அங்கு பணிபுரியும் அலுவலக உதவியாளர் நவீன் குமாரை அணுகி கேட்டபோது ரூ. 2 லட்சம் லஞ்சம் கொடுத்தால் அந்த பதிவை ரத்து செய்து தருவதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உலகநாதன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் முதல் கட்டமாக ரூ.1 லட்சம் கொடுப்பதாகவும், வேலை முடிந்த பிறகு மீதி ரூ.1 லட்சம் தருவதாக கூறுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்து ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து பணத்துடன் சென்றபோது டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் சுரேஷ்பாபு என்பவரிடம் லஞ்ச பணத்தை கொடுக்குமாறு நவீன்குமார் கூறியுள்ளார். அவ்வாறே பணத்தை கொடுத்தநிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைச்செல்வன், ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சுரேஷ் பாபுவை கையும் களவுமாக பிடித்தனர்.

அவரிடம் விசாரணை செய்தபோது, அலுவலக உதவியாளர் நவீன் குமாரிடம் கொடுப்பதற்காக மேற்கண்ட பணத்தை வாங்கியதாக ஒப்புக்கொண்டார். அதனடிப் படையில் அலுவலக உதவியாளர் நவீன்குமார் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் சுரேஷ் பாபு ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x