Published : 21 Jul 2023 06:50 AM
Last Updated : 21 Jul 2023 06:50 AM
சென்னை: நேபாளத்திலிருந்து பிஹார் வழியாக தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புடைய புதிய வகை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமாநிலத்திலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக செம்பியம் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி, துணை ஆணையர் ஈஸ்வரன் மேற்பார்வையில் தனிப்படை போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதல் கட்டமாக பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பிஹாரிலிருந்து சென்னை சென்ட்ரல் வந்த ரயிலிலிருந்து இறங்கிய பெண் உட்பட 3 பேரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தனர்.
இதையடுத்து போலீஸார், அவர்களது உடைமைகளைச் சோதித்தனர். அப்போது, அதிலிருந்த உயர் ரக போதைப் பொருட்களைத் தயார் செய்யும் மூலப் பொருள் (சாரஸ்), கஞ்சா எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவை நேபாளத்திலிருந்து பிஹார் வழியாகத் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
கஞ்சா எண்ணெய்: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திர குமார் (30), நேபாளத்தைச் சேர்ந்த ராம்சந்திரன் (35), முஸ்கான் ஜா (20) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிலோ எடை கொண்ட கஞ்சா எண்ணெய், போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என சென்னை மாநகர காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT