Published : 07 Jul 2023 04:05 AM
Last Updated : 07 Jul 2023 04:05 AM

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் இருவர் உயிரிழப்பு

பாரதி | முகிலன் : கோப்புப் படங்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், அரசு ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளி ஆனந்த் நகரைச் சேர்ந்தவர் முகிலன் (44). திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கெஜல் நாயக்கன்பட்டி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மல்லிகார்ஜூனன் மனைவி பாரதி (45). இவரும், முகிலனும் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்று மாலை கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரிக்குச் சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் வந்தபோது, பின்னால் கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், சாலையில் சரிந்து விழுந்த முகிலன் மற்றும் பாரதி மீது லாரி சக்கரம் ஏறியதில், இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கிருஷ்ணகிரி நகர போலீஸார், இருவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்து லாரியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x