Published : 09 Jun 2023 04:13 AM
Last Updated : 09 Jun 2023 04:13 AM
பெரம்பலூர்: பெரம்பலூரில் தனியார் மதுபான பாரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்த திரைப்பட இயக்குநரும், ரவுடியுமான செல்வராஜ் என்கிற அப்துல் ரஹ்மான் கடந்த ஜூன் 5 அன்று மாலை சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய பெண் உட்பட 6 பேரை பெரம்பலூர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது; பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தைச் சேர்ந்த அழகிரி என்பவருக்கும், கொலை செய்யப்பட்ட செல்வராஜூக்கும் கட்டப் பஞ்சாயத்து செய்வதில் தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஒரு வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் உள்ள அழகிரி, சிறையில் இருந்தபடி தனது மனைவி சங்கீதா மூலம் திட்டம் தீட்டி செல்வராஜை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய பெரம்பலூர் எளம்பலூர் சாலை மேட்டுத் தெருவைச் சேர்ந்த அபினாஷ் (22), செஞ்சேரி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நவீன்(19), திருச்சி மாவட்டம் துறையூர் வடமலைச் சந்து பகுதியைச் சேர்ந்த நவீன் (20), திருச்சி மாவட்டம் பூலாங்குடி காலனியை சேர்ந்த பிரேம் ஆனந்த் (45), இவரது மனைவி ரமணி (34) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவர் என 6 பேரை போலீஸார் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதில், சிறுவன் திருச்சியிலுள்ள சிறார் கூர் நோக்கு இல்லத்திலும், மற்றவர்கள் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதில் ரமணி, அழகிரியின் சகோதரி ஆவார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, தலைமறைவாக உள்ள அழகிரியின் மனைவி சங்கீதாவை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், இவ்வழக்கில் பெரம்பலூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜன் மகன் சரவணன்(22) நேற்று முன்தினமும், பெரம்பலூர் மாவட்டம் வரகு பாடியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் தன்ராஜ் (28) நேற்றும் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT