

காசநோய் உள்ளிட்ட சில நோய்க்கிருமி தடுப்பு வாக்சைன் ஆன பிசிஜி பிரேசிலிலும் பரவலாக மக்களுக்கு பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, பாகிஸ்தானிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் கரோனா மரணம் பிரேசிலில் அதிகரிக்க பாகிஸ்தானில் குறைவாக இருப்பது ஆய்வாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது கரோனா வைரஸ் பரவல் தொடக்க காலங்களில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு பிசிஜி வாக்சைன் திட்டம்தான் என்று கூறப்பட்டது. ஆனால் அந்தக் கோட்பாடும் தற்போது கரோனா பரவலினால் தவிடுபொடியாகியுள்ளது.
இந்நிலையில் கொலம்பியா பல்கலைக் கழக மருத்துவ மைய பேராசிரியர் அஸ்ரா ரஸா என்பவர் கூறும்போது, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் இறப்பு விகிதம் தனக்கு ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்தார், அதாவது பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரிக்க வேண்டும், ஆனால் அங்கு இறப்பு குறைவாக இருக்கிறது, காரணம் அங்கு பரவலாக பிசிஜி தடுப்பு மருந்து திட்டம் மக்கள் தொகையில் பலருக்கு செலுத்தப்பட்டிருப்பதுதான் காரணம் என்றார்.
“அங்கு தொற்று ஏற்படுவது குறைகிறது என்று அர்த்தமல்ல, மாறாக இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. கரோனா ஆக்ரோஷமாக பரவுகிறது, ஆனால் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் இதன் மூலம் மரண விகிதம் அவ்வளவாக இல்லை” என்கிறார்.
இவர் இவ்வாறு கூறுவதை மறுதலிக்கும் சில ஆய்வாளர்கள் பிரேசிலை உதாரணம் காட்டுகின்றனர், பிரேசிலிலும் 1940களிலிருந்தே பிசிஜி வாக்சைன் பயன்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தையும் கடந்து பலி எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்து விட்டதே என்கின்றனர்.
இது தொடர்பான இன்னொரு ஆய்வில், “1955-ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டு வரை தேசிய நோய் தடுப்பு ஆற்றல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் பிசிஜி வாக்சைன் அளிக்கப்பட்டது. 1982-க்குப் பிறகு பிறநாட்டிலிருந்து குடிபெயர்வோர் குறிப்பாக காசநோய் பாதிப்பு அதிகம் வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே பிசிஜி அளிக்கப்பட்டது.
எனவே கரோனா பாதிப்பில், இறப்பில் வாக்சைனால் பெரிய மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
கலிபோர்னியா இர்வினில் உள்ள தொற்று நோய் பிரிவு பேராசிரியர் மைக்கேல் ஜே.புக்மெயர் கூறும்போது பிசிஜி தடுப்பு மருந்துகளை தேவைக்கும் அதிகமாகப் பயன்படுத்துவதில் ஆபத்து உள்ளது. நோய்த் தடுப்பு எதிர்வினையை மிகவும் வலுவுள்ளதாக்கி பரந்துபட்ட செல்களால் உருவாக்கப்படும் சைட்டோகைன்கள் எனப்படும் சிறிய புரோட்டீன்களை அதிகரித்து இதனால் உடலில் எனென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்.
எனவே கரோனா வைரஸ் ஆய்வாளர்களிடத்தில் புரியாத ஒரு புதிராக மாறிவருகிறது என்பது மட்டும் புரிகிறது.
-ஏஎன்ஐ, மற்றும் ஏஜென்சி தகவல்களுடன்...