Published : 15 Aug 2017 03:21 PM
Last Updated : 15 Aug 2017 03:21 PM

தமிழக முதல்வரிடம் கட்சிகள் ராஜினாமா கோராதது ஏன்?- ட்விட்டரில் கமல் கேள்வி

தமிழக முதல்வரிடம் கட்சிகள் ராஜினாமா கோராதது ஏன்? என நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைக்காலமாகவே நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை பலவிதமாக விமர்சித்து வருகிறார்.

அவருக்கு தமிழக எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சர்களும் காரசாரமாக பதிலளித்து வருகின்றனர். அந்த வரிசையில் இன்று நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.

"ஒரு மாநிலத்தில் நடந்த துர்சம்பவத்துக்கும் ஊழலுக்கும் அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் எனக் கட்சிகள் கோருகிறது என்றால் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என எந்தவொரு கட்சியினரும் கோராதது ஏன்? தமிழக முதல்வரின் ராஜினாமாவைக் கோரும் அளவுக்கு இங்கு குற்றங்கள் நடந்திருக்கின்றனவே?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உ.பி.யில் குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் பலரும் குரல் கொடுத்துவரும் நிலையில் கமல்ஹாசன் அச்சம்பவத்தை நேரடியாக குறிப்பிடாமல் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மற்றுமொரு ட்வீட்டில், "எனது இலக்கு தமிழகத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். எனது குரலுக்கு வலுசேர்க்க யார் துணை நிற்பார்? திமுக, அதிமுக போன்ற கட்சிகள் அதற்கு உதவி செய்யும் கருவிகளே. அத்தகைய கருவிகள் செயலற்றவையாக இருந்தால் வேறு கருவிகளைத்தான் தேட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த ட்வீட்களை கமல் ரசிகர்கள் பலரும் வேகமாக ரிடீவ்ட் செய்து வருகின்றனர்.

புதிய சுதந்திர போராட்டத்துக்கு தயாராவோம்..

சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம் என கடைசியாக அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில் கூறியிருக்கிறார்.

 kamalhasan tweet 2

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x