Published : 02 Sep 2017 03:38 PM
Last Updated : 02 Sep 2017 03:38 PM

ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும்?- பார்த்திபன்

தானே... செய்துகொண்டால்தானே அது தற்கொலை? ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும்? என மாணவி அனிதா மறைவு குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத நிலையில் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில்... அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும். இனியாவும் நலமாகுமென நம்பி அனிதாவின் குடும்பத்தார்க்கு வருத்தச் செய்தி மட்டும் வாசித்துவிட்டு நகர்தலும் வன்முறையே.

வாழவே துவங்காத ஒரு இளம் பெண் தன் இன்னுயிரை மாய்த்துக் கொ(ல்)ள்ளும் முன் என்னவெல்லாம் யோசித்திருக்கலாம்? அதில் NEET தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதே பிரதம கோரிக்கையாக இருந்திருக்கவேண்டும். அந்த நீள் கனவோடே அவரின் மீளா கண்ணடைத்தல் நிகழ்ந்திருத்தல் வேண்டும். ஏழைகளின் ஓலத்திற்கும் ஒப்பாரிக்கும் ஜிஎஸ்டி போட்டு விசும்பலாக்க நடுவன் அரசு நன்கு அறிந்திருக்கிறது . தானே... செய்துகொண்டால்தானே அது தற்கொலை? ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும்? நூறு உயிர்களையாவது காக்கவே ஒரு மருத்துவர். அம்மருத்துவரையே கொல்வது ? பெருந்துயர்! இனி மறு துயர்- மறு தவற் நிகழுமுன் தடுக்க, இன்று கோர்க்கும் இளைஞர்களின் கரங்கள் விலகா போர் நிகழ வேண்டும்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x