Published : 16 Oct 2020 19:09 pm

Updated : 16 Oct 2020 19:16 pm

 

Published : 16 Oct 2020 07:09 PM
Last Updated : 16 Oct 2020 07:16 PM

முதல் பார்வை: புத்தம் புதுக் காலை

puthampudhukaalai-review

சென்னை

ஐந்து இயக்குநர்கள் ஐந்து குறும்படங்கள், அனைத்துக்கும் பொதுவான கரு, கரோனா நெருக்கடியால் இருக்கும் ஊரடங்கு, எதிர்காலத்துக்கான நம்பிக்கை. இதில் முதல் நான்கு படங்களில் இருக்கும் இன்னொரு பொதுவான அம்சம் உறவுகள், அதன் சிக்கல்கள்.

இளமை இதோ இதோ

சுதா கொங்கராவின் 'இளமை இதோ இதோ' உடன் ஆரம்பிக்கிறது இந்த ஆந்தாலஜி. முன்னாள் காதலர்கள் இருவர், பதின்ம வயதினரைப் போல வீட்டில் பொய் சொல்லிவிட்டுச் சந்திக்கின்றனர். அதே நேரத்தில் சரியாக ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. அந்த 21 நாட்கள் ஒரே வீட்டில் இவர்களுக்குள் நடக்கும் சுவாரசியங்கள்தான் கதை. காதலிக்கும்போது, காதலிப்பவர் கண்களில் நாமும், நம் கண்களில் அவரும் என்றும் இளமையிழப்பதில்லை என்கிற கருத்தோடு தொடங்குகிறது படம். இதில் ஜெயராம் - ஊர்வசி, காளிதாஸ் - கல்யாணி இரண்டு தம்பதிகளும் வெவ்வேறல்ல என்கிற யோசனையிலேயே அட போட வைக்கிறார் இயக்குநர்.

கைதேர்ந்த நடிகர்களான ஜெயராமும் ஊர்வசியும் வரும் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தக் கதாபாத்திரங்களுக்கென தனியாக ஒரு முழுநீளப் படம் எடுத்தாலும் பார்க்கலாம் எனும் அளவுக்கு இருக்கிறது இவர்களின் நடிப்பு. இன்னொரு பக்கம் இளைய தலைமுறை காளிதாஸும் கல்யாணியும் அவர்கள் பங்குக்கு இளமை உற்சாகத்தைக் கூட்டியிருக்கிறார்கள். கல்யாணி பார்வையிலும், காளிதாஸ் சின்னச் சின்ன உணர்ச்சிகளிலும் அசத்துகின்றனர். குறும்படத்தில் பாடல்களுக்கும் இடம் வைக்கலாம் என ஜி.வி.பிரகாஷ் இசையில் இனிமையான பாடல்களைச் சேர்த்திருக்கிறார் சுதா. கதையின் தலைப்புக்கு நியாயம் தருவதைப் போல இருந்தாலும் அவற்றால் சுவாரசியம் கூடவில்லை. படத்தின் முடிவு, அழகு.

அவரும் நானும்/ அவளும் நானும்

தாத்தாவுக்கும் பேத்திக்குமான உறவை தனக்கே உரிய காட்சியல் அழகோடு கொடுத்திருக்கிறார் கவுதம் மேனன். ஆரம்பத்தில் அவரும் நானும், அவளும் நானும் எனத் தனித்தனியாக தலைப்பு வருவதைப் பார்த்து படம் மொத்தமுமே இருவர் பார்வையிலும் மாறி மாறி வருமோ என்று யோசிக்க வைத்து. ஆனால், நேர்க்கோட்டில்தான் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

காதல் திருமணம் செய்த பெண்ணை 30 ஆண்டுகளாகப் பார்க்காமல் தனியாக வசிக்கும் விஞ்ஞானி எம்.எஸ்.பாஸ்கர், ஊரடங்கின்போது தாத்தாவைப் பார்த்துக் கொள் என அப்பா கேட்டுக் கொண்டதால் வேண்டா வெறுப்பாக வரும் ரீத்து வர்மா என இரண்டு கதாபாத்திரங்களுமே கச்சிதம். எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பதற்கென்றே சில காட்சிகள் அமைவதுண்டு. அப்படி இந்தப் படத்தில், தனது மகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆணிடம் தான் ஏன் சரியாகப் பேசுவதில்லை என்பதற்கான காரணத்தைச் சொல்லும் காட்சியில் எம்.எஸ்.பாஸ்கர் கலங்கி, நம்மையும் கலங்க வைக்கிறார்.

அவர் சொல்லும் நுண்ணிய காரணம் தமிழ்த் திரைக்குப் புதிது. ரீத்து வர்மாவும் ஆரம்பத்தில் இறுக்கம், போகப் போகத் தாத்தாவின் குணம் தெரிந்து இயல்பாவது எனச் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார். இந்தக் கதையில் பிசி ஸ்ரீராமின் ஒளிப்பதிவைத் தாண்டிய இன்னொரு சிறப்பு கோவிந்த் வசந்தாவின் இசை. பின்னணி இசையிலும் சரி, கண்ணா தூது போடா என்கிற பாடலிலும் சரி, கதைக்கு அதிக அழுத்தம் சேர்க்கிறார்.

காஃபி, எனி ஒன்?

சுஹாசினி மணிரத்னம் இயக்கியிருக்கும் காஃபி எனிஒன்னுக்கு, அவரது குடும்பத்தில் நடந்த உரையாடல்களே பாதிப்பாக இருக்குமோ என்று ஒன்றிரண்டு இடங்களில் சந்தேகம் வருகிறது. உடல்நலம் குன்றி, நினைவில்லாமல் படுக்கையில் கிடக்கும் அம்மாவைப் பார்க்க முதல் இரண்டு மகள்கள் தவிப்போடு வந்து நிற்க, கடைசியாக, தாமதமாகப் பிறந்த மூன்றாவது மகள் அம்மாவுடன் போட்ட பழைய சண்டையை மனதில் வைத்து மும்பையிலேயே இருந்துவிடுகிறார்.

இவர்கள் அனைவரும் ஒன்று கூடும்போது நடக்கும் அற்புதம்தான் இந்தப் படம். வலிமையான ஒரு பெண், தன் மகள்களையும் அதே மன வலிமையோடு, உறுதியோடு வளர்த்திருப்பார் என்பதைப் பல காட்சிகளில் சொல்லாமல் சொல்கிறார் சுஹாசினி. அப்பா காத்தாடி ராமமூர்த்தி தன் மனைவிக்காக எடுக்கும் முயற்சிகள், ஸ்ருதியின் குரலைக் கேட்டதும் அவர் அம்மாவிடம் தெரியும் மாற்றம் என சின்னச் சின்ன தருணங்கள் நெகிழ்ச்சி.

நாடகத்தனமான படமாக்கம், வசனத்தின் மூலமே அனைத்தையும் சொல்வது என 90-களின் தமிழ்ப் படங்களை ஞாபகப்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம். சற்று அதிகப்படியாகத் தெரிந்தாலும் இயல்பான வசனங்கள் நன்றாக எழுதப்பட்டுள்ளன.

ரீயூனியன்

பள்ளிக் கால நண்பர்கள் ஊரடங்கின்போது சந்தித்தால் என்ன நடக்கலாம் என்பதைச் சொல்கிறது ராஜீவ் மேனனின் ரீயூனியன். தனது வாகனம் பழுதாக, பக்கத்தில் இருக்கும் பள்ளிக் கால நண்பன் வீட்டுக்குள் சிறிது நேரம் காத்திருக்கலாம் என நுழைகிறார். ஆனால் அந்த வீட்டுக்குள்ளேயே அடுத்த சில வாரங்களைச் செலவிடும் நிலை ஏற்படுகிறது.

இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து அது முடியாமல் வெறுப்பின் விளிம்பில் இருக்கும் ஆண்ட்ரியா, பெரிய மருத்துவராக இருக்கும் பள்ளிக் கால நண்பன் குருசரண், குருசரணின் அம்மாவாக லீலா சாம்சன் என மூன்றே கதாபாத்திரங்கள். அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கான நம்பகத்தன்மையை மூன்று நடிகர்களுமே திரையில் கொண்டு வந்து விடுகின்றனர். ஆண்ட்ரியாவின் உடல் மொழி, நொறுங்கிப் போன லட்சியங்கள் குறித்துப் பேசும் விதம், போதைப் பழக்கத்தால் தவிப்பது என சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.

இயக்குநர், தனது முதல் படத்தின் பாடல் மூலமாக ஒரு சிக்கலைத் தீர்க்க நினைத்திருப்பது புதிய சிந்தனைதான். ஆனால், அது திரையில் சொல்லப்பட்ட விதத்தில் செயற்கைத்தனம் அதிகமாகியிருக்கிறது. ஆண்ட்ரியாவிடம் லீலா சாம்சன் தனது கணவரைப் பற்றிப் பேசும் வசனம், ஆண்ட்ரியாவின் பிரச்சினை தெரிந்தும் காட்டும் கனிவு, தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் குருசரண் இருவருமே வெகு இயல்பாக, கதாபாத்திரங்களாகவே வந்து போகின்றனர்.

மிராக்கிள்

குறும்பட வரிசையில் கடைசிப் படமான மிராக்கிளை தனித்துவத்தோடு தந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். தங்கள் மிராக்கிள் (அற்புதம்) நடக்குமா என்று ஏங்கும் இரண்டு சிறிய ரவுடிகள் பற்றிய கதை. இந்த ஐந்து குறும்படங்களில், குறும்படமாகவே யோசித்து எடுக்கப்பட்டது இது மட்டுமே என்பது போலத் தெரிகிறது. ஒளிப்பதிவிலும் படம் மற்ற நான்கு படங்களிலிருந்து தனித்தே தெரிகிறது.

மற்ற கதைகள் அனைத்தையும் முழு நீளத் திரைப்படமாக யோசிக்கலாம், ஆனால் இந்தப் படத்தின் கதைக்கு இதுவே கச்சித அளவு. ஒரு சின்ன மாயாஜாலம், சின்ன திருப்பம் அதோடு தனது 'இறைவி' படத்தின் ஒரு கதாபாத்திரத்தை ஒட்டிய இயக்குநர் கதாபாத்திரம், ஒரு கிளி உருகுது என நள்ளிரவில் திகிலூட்டும் ரிங்டோன் எனத் தனக்கே உரியப் பாணியை விட்டுக்கொடுக்காமல் இருந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் ஆரம்பத்தில் வரும் சாமியார் கதாபாத்திரத்தைக் கதையோடு இணைத்த விதம் சமயோசிதமான சிந்தனை.

ஆனால் இந்தக் கதையை எதில் வகைப்படுத்துவது என்பதில்தான் தடுமாறியிருக்கிறார் இயக்குநர். நகைச்சுவையா, மாயாஜாலமா, த்ரில்லரா, எப்படி வகைப்படுத்த முனைந்தாலும் அந்தச் சுவை நமக்குச் சில நொடிகள் நுனி நாக்கில் மட்டுமே தெரிகிறது.

இந்த ஐந்து படங்களிலும் பொதுவான சிறப்புகள், எந்தப் படத்திலுமே உணர்ச்சிகளில் மிகையுணர்வு இல்லை. முதல் நான்கு கதைகளிலும் காட்டப்படும் உறவுகள், அதிலிருக்கும் சிக்கல்கள், சிக்கல்கள் தீர்க்கப்படும் விதம் என அனைத்தும் முதிர்ச்சியுடன் கையாளப்பட்டுள்ளன. நிகேத் பொம்மி, பிசி ஸ்ரீராம், செல்வகுமார், ராஜீவ் மேனன் என அத்தனை பேரின் ஒளிப்பதிவும் உயர்மட்ட விளம்பரப் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. முதல் நான்கு கதைகளும் அரங்கேறும் வீடுகள், கலை இயக்கம் அனைத்தும் நயத்தோடு அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், காட்சி அழகியலுக்குத் தரும் முக்கியத்துவத்தை பாத்திரப் படைப்பு, அழுத்தமான சூழல்களுக்குத் தரவில்லை என்பதே இந்தப் படத்தின் முதன்மையான பின்னடைவு. ஆடம்பரமான காட்சியமைப்பு, ஆங்கிலக் கலப்பு அதிகமிருக்கும் வசனங்கள் எனப் படத்தைப் பார்க்கும் போது ’மேல்தட்டு மக்களின் வாழ்க்கை போல இது’ என்ற எண்ணம் சில ரசிகர்களிடையே வருவதற்கு வாய்ப்புள்ளது. கார்த்திக் சுப்புராஜின் திரைப்படம் இந்த வகையில் சேராது என்றாலும் அந்தக் கதையும் பெரிதாக எந்தத் தாக்கமும் தராமல்தான் நகர்கிறது.

மொத்தத்தில் இந்தப் 'புத்தம் புதுக் காலை' கண்களுக்கும், மனதுக்கும் இதமாக இருக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு ஆந்தாலஜி படம். கண்களுக்கு விருந்தான அளவுக்கு மனதைத் தொட்டதா என்றால் இல்லை தான். ஆனாலும் தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி. திரையரங்கில் வெளியாகியிருந்தால் மல்டிப்ளக்ஸ் ரசிகர்களுக்கான படமாக வெற்றி பெற்றிருக்கலாம். இப்போதைக்கு வீட்டிலேயே பாதுகாப்பாக ஓடிடி தளத்தில் கண்டு ரசித்திடு்ங்கள். ஐந்தில் ஏதோ ஒன்று கண்டிப்பாக உங்களைக் கவரும்.


தவறவிடாதீர்!

புத்தம் புதுக் காலைபுத்தம் புதுக் காலை விமர்சனம்சுதா கொங்கராராஜீவ் மேனன்கெளதம் மேனன்கார்த்திக் சுப்பராஜ்சுஹாசினி மணிரத்னம்காளிதாஸ் ஜெயராம்ஜெயராம்கல்யாணி ப்ரியதர்ஷன்எம்.எஸ்.பாஸ்கர்ரீத்து வர்மாOne minute newsPudham pudhu kaalaiPudham pudhu kaalai reviewSudha kongaraRajiv menonGautham menonKarthick subbarajSuhasini maniratnamPuthamPudhuKaalaiPuthamPudhuKaalai review

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author