Published : 16 Oct 2020 03:50 PM
Last Updated : 16 Oct 2020 03:50 PM

'800' பட சர்ச்சை: எதிர்ப்பாளர்களை சாடிய ராதிகா

சென்னை

'800' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று தெரிவிப்பவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் ராதிகா சரத்குமார்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே '800' படத்துக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளதை கடும் காட்டமாக விமர்சித்துள்ளார் ராதிகா சரத்குமார். இது தொடர்பாக ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று சிலர் கூறுகின்றனர். இவர்களுக்கு வேறு வேலை இல்லையா. அரசியல் பின்புலம் கொண்ட ஒரு தமிழரின் சன்ரைசர்ஸ் அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் எப்படி இருக்கிறார் என்று அந்த அணியைக் கேட்கலாமே. விஜய் சேதுபதி ஒரு நடிகர், ஒரு நடிகனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்காதீர்கள். விஜய் சேதுபதி மற்றும் கிரிக்கெட் இரண்டிலும் முட்டாள்தனங்களைத் திணிக்காதீர்கள்"

இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சன் ரைசர்ஸ் அணி கலாநிதி மாறன் உடையது. அவருடைய சன் தொலைக்காட்சியில் தான் ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனம் தயாரித்து வரும் 'சித்தி 2' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதனைக் குறிப்பிட்டு பலரும் ராதிகாவிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக ராதிகா சரத்குமார் கூறியிருப்பதாவது:

"சன்ரைசர்ஸ், சன் டிவியின் உரிமையாளர்களுக்கு அரசியல் பின்புலம் இருந்தாலும்கூட இத்தனை ஆண்டுகளும் அவர்கள் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு என ஒவ்வொன்றையும் அதற்கான உரிய மரியாதையுடன், தனித்தனியாக கையாண்டுள்ளனர். அதேபோல் ஏன் நமது சினிமாத் துறையால் கையாள முடியவில்லை. கலையை அரசியல் பார்வையில் பார்க்காமல் இருக்கலாமே.

நான் அந்த ட்வீட்டைப் பதிவு செய்யக் காரணம் விவாதங்களுக்கு வழிவகுக்க வேண்டுமென்பதல்ல. மாறாக திரைத் துறைக்கும், சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கும் தோள் கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம். அதனாலேயே சன்ரைசர்ஸ் பெயரை ஒரு சாட்சியாகப் பயன்படுத்தியுள்ளேன். சன்ரைசர்ஸின் பாரபட்சமற்ற, நடுநிலையான, தொழில்நெறி சார்ந்த அணுகுமுறையைச் சுட்டிக்காட்டியுள்ளேன்."

இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x