'பஹிரா' தலைப்பு வைத்ததன் பின்னணி: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

'பஹிரா' தலைப்பு வைத்ததன் பின்னணி: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்
Updated on
1 min read

'பஹிரா' தலைப்பு வைத்ததன் பின்னணி என்ன என்பதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

'காதலை தேடி நித்யா நந்தா' படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால், பிரபுதேவா நடிக்கும் படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால், இந்தப் படத்தின் படப்பிடிப்பைப் பாதியில் விட்டுவிட்டுச் சென்றார் பிரபுதேவா. தற்போது 'தபங் 3' படத்தைத் தொடர்ந்து 'ராதே' படத்தை இயக்கி வருகிறார்.

அதன் படப்பிடிப்புக்கு இடையே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் பிரபுதேவா. தற்போது 50% படப்பிடிப்பு முடிந்துள்ள சூழலில் படத்தின் தலைப்புடன் கூட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 'பஹிரா' என்ற தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

இதனிடையே, 'பஹிரா' தலைப்புக்கான காரணம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் "’தி ஜங்கிள் புக்’ காமிக்ஸ் கதையில் வரும் ஒரு கருஞ்சிறுத்தையின் பெயர் தான் ’பஹிரா’. அந்தக் கதையில் வரும் நாயகன் பாத்திரமான மோக்ளியை பாடுபட்டுக் காப்பாற்றும். இந்தப் படத்தில் பிரபுதேவா சாரின் கதாபாத்திரம் இந்த குணநலன்களைக் கொண்டதாக இருக்கும்.

பாதுகாப்பு அரணாக, காப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கதாபாத்திரம் அவருடையது, அதனால் தான் இந்தப் பெயரை வைத்தோம். இந்தப் படம் சைக்கோ த்ரில்லர் கலந்த மர்ம வகை படமாகும். அதனுள் பல ஆச்சரியங்களும் பல திருப்பங்களும் கொண்டிருக்கும். இதுவரை பிரபுதேவா சார் நடித்த படங்களிலிருந்து முழுக்க மாறுபட்ட ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். பிரபுதேவா சாரை நீங்கள் இதுவரை பார்த்திராத புதிய அவதாரத்தில், புத்தம் புது கோணத்தில் காண்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

அமைரா தஸ்தர் நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அபிநந்தன், இசையமைப்பாளராக கணேசன் சேகர், எடிட்டராக ரூபன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in