

அனைத்து தடைகளையும் எதிர்த்துப் போராடுவோம்; சேர்ந்திருப்போம் என்று தனது காதலர் தினப் பதிவில் பாவனா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை பாவனாவுக்கும், கன்னட சினிமா தயாரிப்பாளரும், தொழிலதிபருமான நவீனுக்கும் 2018-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் பாவனாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். பாவனாவுக்கு இக்கட்டான சமயத்திலும் கூட அவருக்கு ஆதரவாக இருந்தவர் நவீன்.
தன் திருமணத்துக்குப் பிறகு திரையுலகிலிருந்து விலகி இருந்தவர், கன்னடத்தில் உருவான '96' ரீமேக்கில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.
நேற்று (பிப்ரவரி 14) காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவர் நவீன் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் பாவனா. அதில், "2011-ல் உன்னைச் சந்தித்தபோது நீதான் என்னவன் என்று எனக்கு அப்போது தெரியாது. தொழில் ரீதியாகத் தயாரிப்பாளர் - நடிகர் என்ற உறவிலிருந்து நாம் இருவரும் நல்ல நண்பர்களாகக் குறைந்த கால நேரத்தில் மாறினோம்.
சிறந்த உறவுகள் நட்பில் தான் ஆரம்பிக்கும் என்பதைப் போல. நாம் காதலில் விழுந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன. நம்மைப் பிரிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் கடந்து, இன்னும் வலிமையாகச் சேர்ந்திருக்கிறோம். எல்லா தடைகளையும் நாம் எதிர்த்துப் போராடுவோம், சேர்ந்திருப்போம். நீ நீயாக இருப்பதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார் பாவனா